Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

விவசாய விளைபொருள் சந்தையை 3-வது நபருக்கு குத்தகைக்கு விடுவது ஏன்? சேலம் மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை

விவசாய விளைபொருள் சந்தையை மூன்றாவது நபர்களுக்கு குத்தகைக்கு விடுவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சேலம் அம்மாபேட்டை மாநகராட்சி வ.உ.சி மலர் தினசரி அங்காடியில் உள்ள பெரிய கடைகளுக்கு ரூ.20 என்றும், சிறிய கடைகளுக்கு ரூ. 15 என்றும், தலை சுமை வியாபாரத்துக்கு ரூ. 10 என்றும் சேலம் மாநகராட்சி வாடகை நிர்ணயம் செய்துள்ளது. இந்த தொகையை வசூலிக்க சூரமங்கலம் முருகன் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிகமாக ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்ததால் முருகனுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முருகன், தனது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத்தடையுத்தரவு பெற்றார். அந்த உத்தரவை எதிர்த்து பிரபாகரன், ஜெகதீஷ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கவும், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, விவசாய விளைபொருள் சந்தையை மூன்றாவது நபர்களுக்கு குத்தகைக்கு விடுவது ஏன் என்றும், மாநகராட்சி மலர் சந்தையை மாநகராட்சியே ஏன் நடத்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் விவசாயிகளுக்காக மானியங்களையும், பல்வேறு நலத் திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தும்போது, விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கு தேவையான வாய்ப்பை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தி கொடுக்காமல், ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதால் விவசாயிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர், என வேதனை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் என்.சுரேஷ் என்பவரை நியமித்துள்ள நீதிபதி பி.புகழேந்தி, இந்த வழக்கில் சேலம் மாநகராட்சி வரும் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x