Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாகப்பட்டினம்: கோவை மாவட்டம் பீளமேடு காந்தி நகரைச் சேர்ந்தவர் அனுசுயா. இவருக்கும், விருதுநகர் மாவட்டம் பிச்சப்பத்தி மாங்குளம் வடக்கு வீதியைச் சேர்ந்த மாரிச்செல்வத்துக்கும் சில மாதங்களுக்கு முன் முகநூல் மூலம் காதல் ஏற்பட்டு, திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு அனுசுயா வீட்டார், மாரிச்செல்வத்துக்கு ரூ.3 லட்சம் ரொக்கம், இருசக்கர வாகனம், 5 பவுன் நகை ஆகியவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி என்ற பெண்ணையும் மாரிச்செல்வம் காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த அனுசுயா, தன்னை ஏமாற்றிய மாரிச்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தங்களிடமிருந்து வரதட்சணையாக பெற்ற பணம், நகைகளை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரியும் நேற்று முன்தினம் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், அனுசுயா தனது பெற்றோருடன் நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள், அனுசுயாவின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், நாகூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர், அனுசுயாவிடம் விசாரணை செய்தனர். பின்னர், அவரது புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x