Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடரும் கனமழை தாமிரபரணியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து நேற்றும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,465.63 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 2,360.18 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,161 கனஅடி தண்ணீர் வந்தது. 3,149 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மற்ற அணைகளின் நீர்மட்டம்: சேர்வலாறு- 141.73 அடி, வடக்கு பச்சையாறு- 33.50 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடுமுடியாறு- 27.75 அடி.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியிருக்கும் நிலையில், இவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தண்ணீர் முழுவதும் தாமிரபரணியில் உபரியாக திறந்துவிடப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. மணிமுத்தாறு அணைப்பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பாபநாசம், மணிமுத்தாறில் நேற்று பகலில் கனமழை பதிவானது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பாபநாசத்தில் 85 மி.மீ., மணிமுத்தாறில் 70 மி.மீ. மழை பெய்திருந்தது. மற்ற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 48, சேரன்மகாதேவி- 28.40, நாங்குநேரி- 24, பாளையங்கோட்டை- 14, ராதாபுரம்- 23, திருநெல்வேலி- 13.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை: தொடர் மழையால் மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கரையோரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தினர் ஆற்றுக்கு குளிக்கச் செல்ல வேண்டாம். மேலும், கால்நடைகளையும் ஆற்றின் பக்கம் அழைத்து செல்ல வேண்டாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல அனுமதிக்கக் கூடாது. தாமிரபரணியின் குறுக்கேயுள்ள பாலங்களில் நின்று செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கோயில் நடை சாத்தப்பட்டு, உற்சவர் சிலைகள் மேலக் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் ராமநதி அணையில் 8 மி.மீ., சங்கரன்கோவிலில் 4 , ஆய்க்குடியில் 3.60, தென்காசியில் 2.60, கருப்பாநதி அணை, குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஆகியவற்றில் தலா 2 , சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை, ராமநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் இவற்றுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

அதிகபட்சமாக நேற்று மாலை 4 மணி வரை கடனாநதி அணையில் 60 மி.மீ. மழை பதிவானது. அணையில் இருந்து மாலையில் 2,440 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் கடனாநதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.77 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 74.50 அடியாகவும் இருந்தது. நேற்று காலையில் இருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தூறிக்கொண்டே இருந்தது. தொடர் மழையால் குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி இந்த அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x