Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM

டெல்லி சாலைகளை மறித்து போராட்டம் விவசாயிகளை உடனடியாக அகற்ற கோரி மாணவர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பொதுமக்களை அதிகம் பாதிக்கும் வகையில் டெல்லி எல்லைகளை அடைத்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். ஒரு மாதத்துக்கு மேல் நடைபெற்று வரும் போராட்டத்தால் பல பிரச்சினை கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், சட்டக் கல்லூரி மாணவர் ரிஷப்சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் ரிஷப் சர்மா கூறியிருப்பதாவது:

ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குவிந்துள்ளனர். டெல்லி எல்லைப் பகுதிகளை அடைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து தடைபட்டு வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் ஒரே இடத்தில் கூடியிருப்பதால், கரோனா தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

புராரி பகுதியில் உள்ள நிரன்காரி மைதானத்தில் விவசாயிகள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த யோசனையை விவசாயிகள் மறுத்துள்ளனர். தொடர்ந்து சாலைகளை மறித்து போராட்டம் நடத்துகின்றனர். கரோனா வைரஸ் தொற்று இன்னும் கூட பெரும் அபாய நிலையிலேயே உள்ளது. இந்தத் தொற்று முடிவுக்கு வந்த பிறகு கூட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தலாம். அதுவரை விவசாயிகளை டெல்லியில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் ரிஷப் சர்மா கூறினார்.

அத்துடன், 40 விவசாய சங்கங்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க கோரியும் ரிஷப் சர்மா தனியாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிஎஸ்.ஏ.பாப்டே, நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, நீதிபதி வி.ராமசுப்பிர மணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்தத் தகவல் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அதையும் அவர்கள் ஏற்காமல் போராட்டம் நடத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x