Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM

தருமபுரி மாவட்டத்தில் நவீன வேளாண் பொறியியல் இயந்திரங்கள் அறிமுகம் குறைந்த வாடகையில் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே சோளத்தட்டு அறுவடை இயந்திர செயல் விளக்க நிகழ்ச்சி, உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் நடந்தது. உடன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உள்ளிட்டோர்.

தருமபுரி

வேளாண் பொறியியல் துறையில் குறைந்த வாடகையில் நவீன இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம், வகுரப்பம்பட்டி ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை கோட்டம் மூலம், மேட்டு நிலத்தில் மானாவாரியாக பயிரிடப்படும் சோளத் தட்டு அறுவடை செய்ய டிராக்டரின் முன்புறத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சோளத்தட்டு அறுவடை இயந்திர செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் அமைச்சர் பேசியது:

விவசாய பணிகளுக்கான ஆள் பற்றாக்குறை நிலவும் சூழலில், அறுவடை செய்ய இயலாமல் பயிர்கள் பாழாகி விடாமல் காக்க உதவும் வகையில் அதி விரைவாக வேளாண் பணிகளை செய்ய பல்வேறு கருவிகள் வேளாண் பொறியியல் துறை மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

சோளத்தட்டு அறுவடைக்கு ஏக்கருக்கு ரூ.2500 வரை கூலி செலவாகும். டிராக்டரில் பொருத்தப்பட்ட பிரத்தியேக இயந்திரம் மூலம் அறுவடை செய்தால் 1 மணிக்கு ரூ.340 கட்டணத்தில் அறுவடை செய்யலாம். 1 ஏக்கருக்கு ரூ.1000-க்குள்ளாக செலவு அடங்கி விடும். குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் பணிகள் விரைவாக முடிக்கப்படும்.

வேளாண் பொறியியல் துறை தருமபுரி கோட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் அரசு மூலம் 58 குதிரைத் திறன் கொண்ட 3 டிராக்டர்கள், மண் சமன் செய்யும் 2 இயந்திரங்கள், மண் தள்ளும் 1 இயந்திரம், சோளத்தட்டு அறுவடை செய்யும் 2 இயந்திரங்கள், கரும்பு, தக்காளி, மிளகாய் நாற்று நடவு இயந்திரம், வேர் கடலையை தோண்டி பறிக்கும் இயந்திரம், தென்னை மட்டைகளை துகளாக்கும் இயந்திரம் உள்ளிட்டவை தலா 1 ஆகியவற்றை சலுகை வாடகையில் பயன்படுத்த தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகள் இந்த இயந்திரங்களை சலுகை வாடகையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி கோட்டாட்சியர்(பொ) தணிகாசலம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள் பத்மாவதி, சந்திரா, விக்னேஷ், வட்டாட்சியர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x