Last Updated : 10 Jan, 2021 03:28 AM

 

Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM

நலிவடைந்துவரும் சுண்ணாம்பு தயாரிப்பு தொழில்

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள சேரிப்பாளையம், ஆண்டிப்பாளையம், மோதிரபுரம், கண்ணப்பன் நகர், கோட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு உற்பத்திக் காளவாய்கள் செயல்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஓடைகளில் கிடைக்கும் ஒருவகை பாறைக் கற்கள் சுண்ணாம்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பாறைக் கற்களை சிறு, சிறு கற்களாக உடைத்து, அவற்றை கரிக்கட்டைகள், விறகு மற்றும் தேங்காய்மட்டைகளுடன் சேர்த்து சூளைகளில் வேகவைப்பதன் மூலம் சுண்ணாம்பு கிடைக்கிறது.பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த சுண்ணாம்பு, வீடுகள், தொட்டி, கிணறு போன்றவற்றுக்கு வெள்ளையடித்தல், கட்டிடங்களின் மேல்தளத்துக்கு சுருக்கிப்போடுதல், பட்டுப்புழு வளர்ப்பு மனைகள், கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினியாகவும் , தென்னை மரங்களில் கரையானை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், கிராமங்களில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தோட்டத்தில் உள்ள கிணறுகளை சுத்தப்படுத்தி, தூர்வாரி சுண்ணாம்பு கொட்டப்பட்டும். இதனால், தண்ணீர் சுத்தமாவதுடன், குடிநீர் மூலம் உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு சத்துகள் கிடைக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. நாகரிக வளர்ச்சியால் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிப்பது குறைந்து, வண்ண பெயின்ட் மற்றும் ‘டிஸ்டம்பர்’ ஆகியவை பயன்படுத்தப்படுவதால், கடந்த 15 ஆண்டுகளாக சுண்ணாம்பு பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் நடைபெற்ற சுண்ணாம்பு உற்பத்தி, தற்போது ஆடி மாதம் மற்றும் பொங்கல் பண்டிகைக் காலங்களில் மட்டும், தேவைக்கேற்ப நடைபெறுகிறது.

இதுகுறித்து சுண்ணாம்பு உற்பத்தியாளர்கள் கூறும்போது, "கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடை சுண்ணாம்புக் கற்கள், நிலக்கரிக் கழிவு, காய்ந்த தென்னை மட்டைகள் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு, ரசாயனக் கலப்பில்லாத சுண்ணாம்பு பொடி, கல் சுண்ணாம்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது வீடுகளுக்கு சுண்ணாம்பு பயன்படுத்துவது குறைந்துவிட்டதால், சுண்ணாம்புக் காளவாய்களும் குறைந்து, பல குடும்பங்கள் மாற்று வேலைக்குச் சென்றுவிட்டன. சிலர் மட்டுமே வேறுவழியில்லாமல் சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது பாறைக்கற்கள், தேங்காய்மட்டை, விறகு, கரிக்கட்டை ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதுடன், கூலியாட்கள் கிடைப்பதும் அரிதாகிவிட்டது. இதனால் தயாரிப்புச் செலவு அதிகரித்து, சுண்ணாம்பு உற்பத்தித் தொழில் நலிவடைந்து வருகிறது. முன்பு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிதும், பெரிதுமாக 100-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக் காளவாய்கள் இருந்தன. தற்போது 20-க்கும் கீழ் குறைந்து விட்டன. எதிர்காலத்தில் சுண்ணாம்பு உற்பத்தியே இல்லாத நிலை உருவாகும். எங்கள் தலைமுறையுடன் இத்தொழில் முடிவடைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x