Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசல் சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு ஆட்டமிழப்பு இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் சேர்ப்பு

சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித்.

சிட்னி

இந்திய அணிக்கு எதிரான 3-வதுடெஸ்டில் ஆஸ்திரேலிய அணி,முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார். தொடர்ந்துவிளையாடிய இந்திய அணி 2-ம் நாள் முடிவில் 2 விக்கெட்இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 55 ஓவர்களில் 2 விக்கெட்இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மார்னஸ் லபுஷேன் 67, ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களுடன் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 91 ரன்கள் எடுத்தநிலையில் ஜடேஜா பந்தில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஸ்மித்துடன் இணைந்து லபுஷேன் 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தார். இதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி சற்று ஆட்டம்கண்டது. மேத்யூ வேட் 13, பாட்கம்மின்ஸ் 0 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினர். கேமரூன் கிரீன் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும், கேப்டன் டிம் பெயின் 1 ரன் எடுத்த நிலையிலும் பும்ரா பந்தில் நடையைக் கட்டினர்.

7 விக்கெட்களை இழந்த நிலையில் மட்டையை சுழற்றிய ஸ்மித்201 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் தனது 27-வது சதத்தை விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மிட்செல் ஸ்டார்க் 24 ரன்கள் எடுத்த நிலையில் நவ்தீப் சைனி பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து நேதன் லயன்(0), ஜடேஜா பந்தில் வெளியேறினார்.

131 ரன்கள் எடுத்த நிலையில்ஜடேஜாவின் அபாரமான த்ரோவால் ஸ்மித் ரன் அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் 105.4 ஓவர்களில் 338 ரன்களுக்கு முடிவடைந்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்களையும், பும்ரா, சைனி ஆகியோர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து விளையாடிய இந்திய அணியில், ரோஹித் சர்மா, 26 ரன்களும், ஷுப்மன்கில் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய புஜாரா9 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 242 ரன்கள் பின்தங்கி உள்ள இந்தியஅணி இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

ஸ்டீவ் ஸ்மித் சாதனை

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்மித் சதம் விளாசினார். இது அவருக்கு 27-வது சதமாகும். இதன் மூலம் விரைவாக 27 சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை படைத்தார் ஸ்மித். இதற்கு முன்னர் இந்தியாவின் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 141 இன்னிங்ஸ்களில் 27சதங்களை அடித்து இருந்தனர். இந்த சாதனையை தற்போது ஸ்மித், 136 இன்னிங்ஸ்களில் அடித்து முறியடித்துள்ளார். இந்த வகை சாதனைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 70 இன்னிங்ஸ்களில் 27 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x