Published : 05 Jan 2021 08:21 AM
Last Updated : 05 Jan 2021 08:21 AM

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கம் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது தமிழகம் முழுவதும் 2.10 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது

தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சம் குடும் பங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2,500 ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணி தொடங்கியது.

தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் இந்தப் பொருட்கள் வழங்கப் படும். குறிப்பிட்ட நாட்களில் பெற முடி யாதவர்கள், ஜன.13-ல் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழர் திருநாளான பொங்கல் பண் டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் அரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், தலா ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு கரோனா பரவலால் பணியிழப்பு, ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் இவற்றை கருத்தில்கொண்டு, அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரி சாக ரூ.2,500 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று கடந்த மாதம் 19-ம் தேதி எடப்பாடி தொகுதியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, டிச.21-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 9 பேருக்கு தலா ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை உள் ளிட்ட பொங்கல் தொகுப்பை வழங்கி, இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அத்துடன், 2 கோடியே 9 லட்சத்து 91 ஆயிரத்து 40 அரிசி குடும்ப அட்டைகள், 18,923 இலங்கைத் தமிழர்கள் என 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 963 குடும்ப அட்டைகளுக்கு ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை களில் ஜனவரி 4-ம் தேதி முதல் பொங் கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டிச.26 முதல் 30-ம் தேதி வரை இதற்கான டோக்கன் களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர். ஆளும் கட்சியினர் மூலம் டோக்கன் வழங்கப் படுவதாக புகார் எழுந்ததையடுத்து, ரேஷன் கடை ஊழியர்களால் வழங் கப்பட்ட டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப் படும் என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்தது.

இதையடுத்து கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவை கூட்டுறவு சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் துறைக்கு அனுப்பப்பட்டன. முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகி யவை முறையாக கூட்டுறவு பணி யாளர்களால் பாக்கிங் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டன. கரும்பு கட்டுகள் நேற்று முன்தினம் மாலை அனைத்து கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. கூட்டுறவு வங்கிகளில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, கடைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டன.

இந்நிலையில், அறிவித்தபடி பொங் கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நேற்று தொடங்கியது. தமிழகம் முழு வதும் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ரேஷன் கடைகளில் அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற் றும் பொங்கல் தொகுப்பு விநியோ கிக்கப்பட்டது. பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடை வெளியை பின்பற்றியும் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.

அட்டைதாரர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் உள்ள தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ள லாம். ஜன.12-ம் தேதி வரை இவை வழங்கப்படும். குறிப்பிட்ட நாட்களில் பொருட்களை வாங்காதவர்கள் ஜன.13-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x