Last Updated : 04 Jan, 2021 03:20 AM

 

Published : 04 Jan 2021 03:20 AM
Last Updated : 04 Jan 2021 03:20 AM

பழநி பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? சீசன் தொடங்க உள்ளதால் விபத்து உயிரிழப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்று பழநிமலை. ஆறுபடை வீடுகளில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் ஒரே ஸ்தலமாகவும் விளங்குகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நேரங்களில் மட்டுமே பழநி மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றுவந்த நிலை மாறி, கூட்ட நெரிசல்உள்ளிட்ட சிக்கல்களை தவிர்க்கும்வகையில் தங்களுக்கு உகந்த நேரங்களில் பாதயாத்திரை செல்லும் போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் டிசம்பர் தொடங்கி கோடை காலம் அக்னி நட்சத்திரக் கழிவு எனப்படும் நாட்களான அக்னி வெயில் நிறைவு பெறும் மே மாதம் வரை 6 மாதங்களுக்கு இந்நிகழ்வு தொடர்கிறது. குறி்ப்பாக திருப்பூர்,கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். நடப்பாண்டு பாதயாத்திரை சீசன் தொடங்க உள்ளது.

வாகனங்கள் மோதி உயிரிழப்பு

பாதயாத்திரை செல்வதில்முக்கியப் பிரச்சினை என்னவென்றால், அனைவரும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதுதான். அவ்வாறு செல்வோர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு திருப்பூர் கோவில்வழி அருகே பாதயாத்திரை சென்றபோது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த காளியப்பகவுண்டர் (70) என்ற பக்தர் வாகனம் மோதி உயிரிழந்தார்.

வரிசைப்படுத்தி அனுப்ப வேண்டும்

இதுதொடர்பாக 93-வது ஆண்டாக தற்போது பழநிக்கு பாதயாத்திரை செல்லும் திருப்பூர் (விஜயாபுரம்) பாதயாத்திரை மற்றும் காவடி குழுவின் தலைவர்ஆர்.கே.கே.எம்.சபாபதி 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும் போது, "முன்னோர் காலத்தில் தைப்பூசம், பங்குனி உத்திர நிகழ்வுகளுக்கு மட்டுமே பாதயாத்திரை நடைபெறும். ஆனால், தற்போது டிசம்பர்முதல் மே மாதம் வரை பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். டிசம்பர் மாதத்தில் நீலகிரி மாவட்டமக்கள்தான் முதற்கட்டமாக பாதயாத்திரையை தொடங்குகின்றனர். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களுக்கு அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். மார்ச், ஏப்ரல், மே இறுதி வரை பகுதி, பகுதியாக முருகனை தரிசிக்க பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

நடப்பாண்டு கரோனா பாதிப்புக்குமத்தியில் பாதயாத்திரை, அபிஷேகம், வழிபாடு குறித்து எந்தவித வரைமுறை அறிவிப்புகளும், இதுவரைபொதுவாக தெரிவிக்கப்பபடவில்லை. இருப்பினும், பக்தர்கள்பாதயாத்திரை செல்ல தொடங்கிவிட்டனர்.

அனைவரும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறையினர் சார்பில் ஒளிரும் பட்டைகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குதல், ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை தொய்வின்றி செய்ய வேண்டும்" என்றார்.

மேலும், பக்தர்கள் தங்குவதற்கான ஓய்விடங்களை சாலையோகமாக அமைக்க வேண்டும். தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பக்தர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன.

ஒளிரும் பட்டைகள் வழங்கப்படும்

திருப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 90 கி.மீ. தூரம் பல்வேறு பகுதிகளில் பழநி பாதயாத்திரைக்கான வழித்தடங்கள் வருகின்றன. பாதயாத்திரை சீசன் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. சீசன் தொடங்கஇன்னும் சில நாட்கள் உள்ளன. தற்போது குறைந்த அளவில் ஆங்காங்கு பக்தர்கள் செல்கின்றனர். அதிகளவில் பக்தர்கள் செல்லத் தொடங்கும்போது ஒளிரும் பட்டைகள், சட்டைகள், கைத்தடிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். அந்தந்த சரக துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.

வரைமுறைகள் வெளியிடப்படவில்லை

பழநி மலை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாக தரப்பில் கேட்டபோது, "கரோனா காலம் என்பதால், பாதயாத்திரைவருவோருக்கான வரைமுறைகளை இதுவரை அரசு வெளியிடவில்லை. ஆனால், தற்போது முதலே பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக வருகின்றனர். வருவோர் வழக்கமான வழியில் சென்று கடவுள் தரிசனம் செய்கின்றனர்" என்றனர். பாதயாத்திரை செல்வோரில் பெண்கள், சிறுவர், சிறுமியர் என பல்வேறு வயதினரும் இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறையினர் உறுதி் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x