Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

சென்னை பெரும்பாக்கத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் ரூ.116 கோடியில் 1,152 குடியிருப்புகள் காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்கு காணொலி காட்சி மூலம்பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்நாட்டினார். இதில் சென்னை பெரும்பாக்கத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் ரூ.116.27 கோடி மதிப்பீட்டில் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், உலக அளவிலான கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் சென்னை, மத்திய பிரதேசத்தில் இந்தூர், குஜராத்தில் ராஜ்கோட், ஜார்க்கண்டில் ராஞ்சி, திரிபுராவில் அகர்தலா, உத்தர பிரதேசத்தில் லக்னோ ஆகிய இடங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படுகின்றன. சென்னையில் மாதிரி வீட்டுவசதி திட்டமாக, பெரும்பாக்கம் பகுதியில் ரூ.116.27கோடி மதிப்பீட்டில் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

இந்த குடியிருப்பு திட்டப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்றுஅடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, குஜராத் மாநில முதல்வர்கள், மத்திய வீட்டுவசதி துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம், வீட்டுவசதி துறை செயலாளர் நா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தியதற்காக 88 பேருக்குவிருதுகளை பிரதமர் மோடி வழங்கினார். ஜிஎச்டிசி - இந்தியா திட்டத்தின் 54 வகையான புதுமையான வீட்டு வசதி தொழில்நுட்பம் அடங்கிய கையேட்டையும் பிரதமர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஏழைகளும், நடுத்தர வகுப்புமக்களும் வாங்கும் வகையில்தரமான வீடுகளை வழங்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த வீடுகள் கட்டப்பட உள்ளன. சென்னையில் கட்டப்படும் வீடுகளுக்கான தொழில்நுட்பம் அமெரிக்கா, பின்லாந்து ஆகியநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வீடுகளில்பிரீகாஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ராஞ்சியில் அமைக்கப்படும் வீடுகளில் ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்ட 3-டி தொழில்நுட்பம் புகுத்தப்படுகிறது.

அகர்தலாவில் அமைக்கப்படும் வீடுகளில் ஸ்டீல்-பிரேம் தொழில்நுட்பம் புகுத்தப்படுகிறது. இதனால்அந்த வீடுகள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் இருக்கும். மேலும் லக்னோ நகரில் அமைக்கப்படும் வீடுகளில் கனடாவில் இருந்து சுவர் தொழில்நுட்பம் கொண்டு வரப்படுகிறது.

இந்த வகையான வீடுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களான குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, சமையல் எரிவாயுஇணைப்பு ஆகியவை வழங்கப்படும். இந்த திட்டம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அவர்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வீடுகளை வாங்க முடியும். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) சட்டம் (ஆர்இஆர்ஏ) அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு புதுவகையான திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. வீடுகளை வாங்குபவர்களுக்கு வரிகளை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக அளவில் பலர் வீடுகளை வாங்க முடியும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

நிதி அதிகரிப்பு

நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

உலக அளவிலான கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைவருக்குமான வீடு திட்டத்தை செயல்படுத்தும் 6 மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தை தேர்வு செய்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை போக்கும்வகையில், மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவால் ‘தொலைநோக்கு திட்டம் 2023’ அறிமுகம் செய்யப்பட்டது. 2023-ம்ஆண்டுக்குள் குடிசைப் பகுதிகள்இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை பொருத்தவரை மத்திய அரசின் பங்கு ரூ.72 ஆயிரம், மாநில அரசின் பங்கு ரூ.48 ஆயிரம்என ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் வழங்கப்பட்டது. கூடுதலாக, தமிழகஅரசு சார்பில் சிமென்ட் கூரை அமைக்க ரூ.50 ஆயிரம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்ட ரூ.23 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை சமீபத்தில் நான் ஆய்வு செய்தபோது, தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டும், கரோனா காலத்தில் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளதாலும் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் தொகை போதுமானது அல்ல என்பது தெரியவந்தது.

எனவே, ஒவ்வொரு வீட்டுக்கும் தற்போது ரூ.70 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் வீட்டுக்கான கட்டுமான செலவு ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்பட்டு, 2.50 லட்சம் வீடுகள் கட்ட ரூ.1,805 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிரதமரின் நகர்ப்புற குடியிருப்பு திட்டத்தை பொருத்தவரை ரூ.27 ஆயிரம் கோடியில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 720 அடுக்குமாடி குடியிருப்புகள், 3 லட்சத்து 42 ஆயிரத்து 769 தனி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு உலக அளவிலான கட்டுமான தொழில்நுட்பத்தில் 413 சதுரஅடி பரப்பில் ரூ.116.27 கோடியில் 1,152 குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்துள்ளது. இது நியாயவிலைக் கடை, 2 அங்கன்வாடி மையங்கள், நூலகம், பால் விநியோக மையம், 6 கடைகளுடன் கூடியதாகும். கழிவுநீர்சுத்திகரிப்பு மையம், துணை மின்நிலையம் ஆகியவையும் இங்கு இடம்பெற்றிருக்கும்.

இத்திட்டப் பணிகள் 15 மாதத்துக்குள் முடிக்கப்படும். பேரிடர்களை தாங்கும் வகையில், அனைத்து பருவகாலத்துக்கும் ஏற்ற வகையில், சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்நுட்பத்துடன் இந்த குடியிருப்பு கட்டப்படுகிறது. சென்னை நகரில் நீர்வழிப் பாதையின் கரையோரங்கள், ஆட்சேபகரமான நிலங்களில் வசிக்கும் நகர்ப்புற ஏழைகள், குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்தவீடுகள் ஒதுக்கப்படும். இதுபோன்ற மத்திய அரசின் திட்டங்கள், முயற்சிகளில் தமிழக அரசுஇணைவது மகிழ்ச்சியான விஷயம்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x