Published : 01 Jan 2021 07:52 am

Updated : 01 Jan 2021 07:52 am

 

Published : 01 Jan 2021 07:52 AM
Last Updated : 01 Jan 2021 07:52 AM

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் பாஜக உறுப்பினரும் ஆதரவு

திருவனந்தபுரம்

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கேரள சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்துக்கு பாஜக உறுப்பினரும் ஆதரவு தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்தார். இத்தீர்மானம் பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


முன்னதாக இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

வேளாண் பொருட்கள் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு தேவைப்படுவோருக்கு நியாயமான விலையில் விநியோகிக்கப்படும் ஒரு நடைமுறை இருக்க வேண்டும். இதற்கு மாறாக, வேளாண் பொருட்கள் மீதான வர்த்தகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையகப்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்கும் பொறுப்பை மத்திய அரசு கைவிடுகிறது.

விவசாயிகளின் போராட்டம் நீடித்தால் அது கேரளாவை மோசமாக பாதிக்கும். கேரளா போன்ற ஒரு நுகர்வோர் மாநிலத்துக்கு வேளாண் பொருட்கள் வருவது நின்றுவிட்டால் அம்மாநில மக்கள் பசியால் வாட நேரிடும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை இழப்பதால், தொழில் நிறுவனங்களின் வலிமைக்கு முன்பு தங்களின் பேரம் பேசும் சக்தி வலுவிழந்துவிடும் என விவசாயிகள் கவலைப்படுகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கேரள சட்டப்பேரவையில் பாஜகவின் ஒரே உறுப்பினராக உள்ள ஓ.ராஜகோபால் கூறும்போது, ‘‘தீர்மானத்தின் மீது நான் வாக்களிக்கவில்லை. ஆளும் கட்சியினர் முன்வைத்த வாதங்களில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. என்றாலும் தீர்மானத்தின் சாராம்சத்தை ஆதரித்தேன்’’ என்றார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x