Published : 01 Jan 2021 07:55 AM
Last Updated : 01 Jan 2021 07:55 AM

2020-ஆம் ஆண்டு கரோனாவால் முடங்கினாலும் சிறப்பாக செயல்பட்ட வேலூர் மாவட்ட காவல் துறை 2.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு

2020-ஆம் ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் முடங்கினாலும், வேலூர் மாவட்ட காவல் துறைக்கு சிறப்பாக அமைந்ததுடன் தேடப் படும் தலைமறைவு குற்றவாளி ஜானியை கைது செய்து பாராட்டு பெற்றனர். அதேபோல், குற்றவழக்குகளிலும் திறம்பட விசாரணை செய்து 190 வழக்கு களில் 2.26 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு மூன்றாகப் பிரித்த நிலையில் 2020-ஆம் ஆண்டுஜனவரி 1-ம் தேதி முதல் புதிய எல்லைகளுடன் மாவட்ட நிர்வாக மும், காவல் துறையும் செயல்படதொடங்கியது. வேலூர் மாவட்டத் தில் கரோனா பொது முடக்கத்தால் சவால்கள் நிறைந்த பணியுடன் வழக்கமான செயல்பாடுகளில் சிறப்பாகவே காவல் துறையினர் செயல்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 34 கொலை வழக்குகள், 40 கொலை முயற்சி வழக்குகள், ஒரு ஆதாய கொலைவழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 190 குற்ற வழக்குகளில் ரூ.3.44 கோடி மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது. இதில், ரூ.2.26 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டது 79 சதவீதமாகும். 38 ரவுடிகள், மணல் கடத்துபவர்கள் 4 பேர், திருட்டு வழக்கில் தொடர் புடைய 30 பேர், சாராய வழக்குகளில் 28 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள் ளனர். மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் 4,725 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.

விபத்து வழக்குகள்

வேலூர் மாவட்டத்தில் 564 விபத்துகளில் வாகன ஓட்டிகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 896 மோட்டார் வாகன வழக்குகளில் அபராதத் தொகையாக மட்டும் ரூ.4 கோடியே 98 லட்சத்து 77 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டை விட ரூ.3 கோடியே 6 லட்சத்து 32 ஆயிரத்து 500 அதிகமாகும். மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 805 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் 333 பேரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 457 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 10 பொக்லைன், 26 லாரி, 257 மாட்டு வண்டி, 71 டிராக்டர், 122 இதர வாகனங்கள் என மொத்தம் 486 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குட்கா வழக்கு

வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், 13 டன் குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதுடன் 17 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மதுவிலக்கு வழக்குகள்

வேலூர் மாவட்டத்தில் 3,275 வழக்குகளில் 3,157 பேர் கைது செய்யப்பட்டனர். 45,222 லிட்டர் சாராயம், ஒரு லட்சத்து 38 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. 14 ஆயிரத்து 348 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 1 டிராக்டர், 1 கார், 3 ஆட்டோ, 5 வேன், 221 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் 35 வழக்குகளில் 49 பேர் கைது செய்யப்பட்டு 29 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ரவுடி ஜானி கைது

வேலூர் மாவட்ட காவல் துறையால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேடப்படும் குற்றவாளியாக ரவுடி ஜானி இருந்தார். 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அவரை பிடிக்க முடியாமல் தனிப்படை காவலர்கள் திணறி வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேரடி கண்காணிப்பில் இயங்கிய தனிப்படையினர் பெங்களூருவில் பதுங்கி இருந்த ஜானியை கைது செய்தனர்.

அதேபோல், வேப்பங்குப்பம் அருகே விவசாய நிலத்தில் வசித்து வந்த தந்தை, மகள் கொலை வழக்கில் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

150 பவுன் நகை மீட்பு

வேலூரில் பிரபல பரியாணி கடை உரிமையாளர் வீட்டில் 250 பவுன் நகை திருட்டு வழக்கில் தடயங்கள் எதுவும் இல்லாத நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து திறம்பட விசாரித்த தனிப்படையினர் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையனிடம் இருந்து 150 பவுன் தங்க நகைகளை 10 நாட்களில் மீட்டுள்ளனர்.

வேலூர் அடுத்துள்ள அரியூர் பகுதியில் பழிக்குப்பழியாக நடந்த 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் கும்பலை 4 மணி நேரத்துக்குள் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு மாவட்ட காவல் துறையின் செயல்பாடு பல்வேறு தரப்பினரால் பாராட்டு பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x