Published : 30 Dec 2020 03:16 AM
Last Updated : 30 Dec 2020 03:16 AM

ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது.

மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களும், இந்திய அணி 326 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 66 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 103.1 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 70 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் 35 ரன்களும், கேப்டன் அஜிங்க்ய ரஹானே 27 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய இந்திய அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே ஆட்ட நாயகனாக தேர்வானார். அவருக்கு ‘முல்லா மெடல்’ வழங்கப்பட்டது. 1868-ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணிக்கு பழங்குடி இனத்தை சேர்ந்த ஜானி முல்லா கேப்டனாக தலைமை வகித்திருந்தார். அவரை கவுரவிக்கும் வகையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முல்லா மெடல் வழங்கப்பட்டுள்ளது.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x