Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி ரயில் சேவையை தொடங்கினார் மோடி

முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் ஓட்டுநர் இல்லாத முதல் டெல்லி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். படம்:பிடிஐ

புதுடெல்லி

நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி முறையில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி டிசம்பர் 24-ம்தேதியுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்தது. மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக தானியங்கி தொழில்நுட்பத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை தற்போது முதல் கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன் மார்க்கத்தில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிங்க் நிற லைன் (மஜ்லிஸ் பூங்கா-ஷிவ் விஹார்) மார்க்கத்தில் 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டதன் மூலம் ஸ்மார்ட் சிஸ்டத்தை நோக்கி இந்தியா எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதை உணர முடியும். இந்தியாவில் முதலாவது மெட்ரோ ரயில் சேவை டெல்லியில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்ற போது 5 நகரங்களில் மட்டும்தான் மெட்ரோ ரயில் சேவை இருந்தது. தற்போது 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் சேவை 25 நகரங்களில் செயல்பாட்டுக்கு வரும்.

கடந்த 2014-ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை 248 கி.மீ. தூரம் வரை இயக்கப்பட்டது. 2025-ம் ஆண்டில் இது 3 மடங்காக உயரும். 1,700 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சேவையை அறிமுகம் செய்ததன் மூலம் உலகளவில் மேம்பட்ட சேவையை அளிக்கும் நாடுகள் பட்டியலில் 7 சதவீதத்தை அளிக்கும் நாடாக டெல்லி மெட்ரோ ரயில் சேவை விளங்குகிறது.

இது மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மிகச் சிறந்த உதாரணம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுவதும் பயணிக்க ஒரே அட்டை

நாடு முழுவதும் பயணிக்க தேசிய பொது போக்குவரத்து அட்டை (என்சிஎம்ஜி) சேவையையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:

கடந்த 18 மாதங்களில் வழங்கப்பட்ட ரூ-பே டெபிட் அட்டையை 23 வங்கிகள் அங்கீகரித்துள்ளன. இந்த அட்டையை மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்த முடியும். இந்தியா முழுவதிலும் உள்ளவர்கள் டெல்லி மெட்ரோ ரயில் சேவையை ரூ-பே அட்டை மூலம் பயன்படுத்தும் வசதி 2022-ம் ஆண்டில் ஏற்படுத்தப்படும். ஒருங்கிணைந்த சேவை என்பது நாட்டை வலிமைப்படுத்தும். அனைத்து வகையான போக்குவரத்து சேவையிலும் பயன்படுத்தும் வகையிலான வசதிக்கு முதல் கட்டமாக இந்த பொது அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் நேரம் மிச்சமாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x