Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் மயிலாடுதுறை மாவட்டம் உதயம் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் உற்சாகம்

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அருகில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயரதிகாரிகள்.

சென்னை/ மயிலாடுதுறை

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை நேற்று உதய மானது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் புதிய மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கடந்த 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதால் பட்டாசு வெடித் தும் இனிப்பு வழங்கியும் பொது மக்கள் உற்சாகக் கொண்டாடினர்.

சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 24-ம் தேதி, விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘நிர் வாக வசதிக்காகவும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக் கத்திலும் நாகப்பட்டினம் மாவட் டத்தை இரண்டாகப் பிரித்து, தமி ழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக் கப்படும்’ என்று அறிவித்தார்.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க, கடந்த ஏப்.7-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட சிறப்பு அதி காரியாக ஆர்.லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக என். நாதா ஆகியோர் கடந்த ஜூலை 12-ம் தேதி நியமிக்கப்பட்டனர். பின்னர், மாவட்ட எல்லைகளை வரையறுக்கும் பணியில் சிறப்பு அதிகாரி லலிதா ஈடுபட்டார். இப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மயிலாடுதுறை புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதற்கான அர சாணை நேற்று வெளியிடப்பட்டது.

இதையடுத்து, நாகப்பட்டி னம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிட மாகக் கொண்டு புதிதாக தோற்று விக்கப்பட்ட மாவட்டத்தை முதல் வர் பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த படி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜகந் நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய 2 வருவாய்க் கோட்டங் கள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 வருவாய் வட்டங்கள், 15 வருவாய் குறு வட்டங்கள் மற்றும் 287 வருவாய் கிராமங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த புதிய மாவட்டம் தோற்று விக்கப்பட்டுள்ளது.

முதல் ஆட்சியர் லலிதா

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஆர்.லலிதா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கு 26 ஏக்கர் நிலத்தை தருமபுரம் ஆதீனத்தினர் தந்துள்ள னர். அந்த இடத்தை கையகப்படுத் தும் பணிகள் நடைபெற்று வருகின் றன. இதற்காக, மிக விரைவில் முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்வார். புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்படும் வரை வணிகவரி அலுவலகக் கட்டிடத்தில் மயி லாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று (நேற்று) முதல் செயல்பட தொடங்கியுள்ளது. இவ் வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நாதா, எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், பாரதி மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், வர்த் தகர்கள் கலந்துகொண்டனர்.

நிறைவேறிய கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் மயிலாடுதுறையில் இருந்து, தெற்கு பகுதியில் இருக்கும் மாவட் டத் தலைநகரான நாகப்பட்டி னத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலையோ அல் லது அருகில் உள்ள திருவாரூர் மாவட்டத்தையோ கடந்துதான் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. எனவே, எல்லா கட்ட மைப்பு வசதிகளையும் உள்ளடக் கிய மயிலாடுதுறையை அரசு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என திமுக, அதிமுக உட்பட பல் வேறு கட்சிகளும் அமைப்புகளும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த கோரிக் கையை வலியுறுத்தி போராட் டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், 30 ஆண்டு கனவு நனவானதால் மயிலாடு துறை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

6 புதிய மாவட்டங்கள்

தமிழகத்தில் 2019 அக்டோபர் மாதம் வரை 32 மாவட்டங்கள் இருந்தன. அதன்பின், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு, வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி ஆகிய மாவட்டங் கள் உருவாக்கப்பட்டன. தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை உதயமாகி உள்ளது. தமிழகத்தில் குறுகிய காலத்தில், அதாவது 13 மாதங்களில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x