Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

முதல்வருடன் நடிகர் விஜய் சந்திப்பு

சென்னை

முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் திடீரென சந்தித்து பேசியுள்ளார். அப்போது ‘மாஸ்டர்’ படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பொங்கல் பண்டிகையைஒட்டி திரையரங்குகளில் ரிலீஸ்செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. திரையுலகினர் வேண்டுகோள் வைத்தால் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் விஜய் நேற்று முன்தினம் இரவு திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ‘மாஸ்டர்' படத்துக்காக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும், சிறப்புக் காட்சிக்கும் அனுமதி வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

திரையரங்கு அதிபர்கள் கோரிக்கை

தமிழ்நாடு திரையரங்கம், மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், திருப்பூரில் நேற்று கூறியதாவது:

கரோனா பாதிப்புக்கு பிறகு, முதன்முறையாக மிகப்பெரிய படமாக, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜன.13-ம் தேதி வெளியாகிறது. பெரிய நடிகர்களின் ஆதரவு இருந்தால்தான் திரையரங்க உரிமையாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். திரையரங்குகள் மீது நடிகர் விஜய் அக்கறை வைத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வரை அவர் சந்தித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 10 மாதங்களுக்கு முன்பே படம் முடிந்த நிலையில், திரையரங்குகளில்தான் இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த விஜய், தயாரிப்பாளர் லலித்குமாருக்கு நன்றி.

கடந்த 10 மாதங்களாக திரையரங்க உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசிடம் வரியை குறைக்க வலியுறுத்தியுள்ளோம். 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x