Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

பெரும்பான்மை இடங்களில் அதிமுக வெற்றி பெற்றால் பழனிசாமிதான் மீண்டும் முதல்வராவார் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் பழனிசாமிதான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார். அதிமுக தலைமையில்தான் எப்போதும் கூட்டணி என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுக பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கட்சி எடுத்த முடிவின்படி பொதுக்கூட்டத்தை நடத்த அறிவித்துள்ளனர். அதிமுகவின்வீர வரலாற்றை இந்த பொதுக்கூட்டம் வெளிப்படுத்தும்’’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்பார்களா?

இது அதிமுகவின் பொதுக்கூட்டம். ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். கூட்டணி அமைந்ததும் அதற்கான பொதுக்கூட்டம் எந்த நேரத்தில், எந்த இடத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியா? அதிமுக தலைமையிலான கூட்டணியா?

நாடாளுமன்ற தேர்தலின்போதும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்தது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருப்பதாகத்தான் மத்திய அமைச்சர் அறிவித்தார். தமிழகத்தில் என்றுமே அதிமுக தலைமையில்தான் கூட்டணி.

முதல்வர் வேட்பாளர் குறித்து மத்திய அமைச்சர் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டாரே?

முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இது அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். எங்களைப் பொறுத்தவரை எங்கள் கட்சி எடுத்த முடிவுப்படி முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கும் நிலையில் அவர்கள் கூட்டணியில் இருப்பார்கள். நாங்கள் பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெறும்போது எங்கள்உறுப்பினர்கள் எங்கள் கட்சியில்இருந்துதான் பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்வார்கள். இந்த முறையும் அதிமுக அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமிதான் முதல்வராவார்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x