Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு 96-வது பிறந்தநாள் முதல்வர், ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 96-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 96-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், ‘‘பிறந்தநாள் காணும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு, நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன். அவருக்கு எனதுஉளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்துக்கு வந்த திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டதலைவர்கள், நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ஆர்.நல்லகண்ணு பேசும்போது, ‘‘சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கும் சாதி, மதம் பார்க்கவில்லை. அண்மைக்காலத்தில் அந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஓர் ஆபத்து வந்துள்ளது.அரசியலமைப்புச் சட்டம் நிலைக்குமா என்ற கேள்வி வந்திருக்கிறது. எப்படி போராடி சுதந்திரத்தைப் பெற்றோமோ அதைப் பாதுகாப்பதற்கும் போராட வேண்டியுள்ளது.அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க போராட வேண்டியுள்ளது’’ என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் பேசியபோது, ‘‘அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக நல்லகண்ணு விளங்குகிறார். தமிழக மக்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியை உருவாக்கி, தமிழகத்தில் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கத்தான் போகிறார்கள்’’ என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும், எந்நாளும் தொய்வடையா சீரிய மக்கள் பணியாளருமான நல்லகண்ணு 96-ம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகளையும், அவர் நீடூழி வாழ்ந்துபொதுப்பணி ஆற்ற வேண்டும் என்ற நமது விழைவையும் பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நல்லகண்ணுவை நேரில் சந்தித்து மலர்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், அமமுகபொதுச் செயலாளர் தினகரன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் நல்லகண்ணுவுக்கு நேரிலும், வாழ்த்துச் செய்தி மூலமாகவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x