Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

பாஜக இரட்டை இலக்க இடங்களை தாண்டாது மேற்கு வங்க பேரவைத் தேர்தல் பற்றி பிரசாந்த் கிஷோர் கருத்து

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் இடங்கள் இரட்டை இலக்கத்தை தாண்டாது என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைக்கு சில மாதங்களில் தேர்தல் நடக்கஉள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கான பணியை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் ஒப்படைத்துள்ளார் முதல்வர் மம்தா பானஜர்ஜி.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘ஊடகங்கள் என்னதான் பாஜகவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இரட்டை இலக்க இடங்களில் கூடஅக்கட்சி வெற்றி பெறாது. அதற்கே மிகவும் போராடும் என்பதுதான் உண்மையான நிலை. இந்த எனது ட்விட்டர் பதிவை சேமித்து வையுங்கள். நான் கூறியது நடக்காவிட்டால் ட்விட்டரில் இருந்து விலகுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறும்போது, ‘‘மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவாக சுனாமி அலை வீசுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். அதன் பிறகு, நாடு ஒரு தேர்தல் வியூக நிபுணரை இழக்கப் போகிறது’’ என்றார்.

பிரசாந்த் கிஷோருக்கு எதிர்ப்பு..

கட்சியின் தேர்தல் பணிகள், வியூகங்கள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் பிரசாந்த் கிஷோர் ஆதிக்கம் இருப்பதற்கு திரிணமூல் காங்கிரஸிலேயே பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் பதவியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரியும் இதை சுட்டிக் காட்டியிருந்தார்.

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேரும் முன்பு சுவேந்து அதிகாரி வெளியிட்ட பகிரங்க கடிதத்தில், ‘‘கட்சிக்கு முதுகெலும்பாக இருந்து உழைத்தவர்கள் அவமதிக்கப்பட்டு ஒதுக் கிவைக்கப்பட்டனர். மக்கள் மனநிலையையும் கள நிலவரங்களையும் அறியாத தனி நபர்கள் கட்சிப் பணிக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மை நிலவரத்தையோ மேற்குவங்கத்தை உருவாக்குவதற்காக நாம் செய்த தியாகங்களையோ அறியாதவர்கள்’’ என்று கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x