Published : 22 Dec 2020 03:15 am

Updated : 22 Dec 2020 03:15 am

 

Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

மின்வாரிய காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்புவதற்கான ஆணை ரத்து தமிழக மின்வாரியம் தனியார்மயம் ஆக்கப்படாது மின்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்

தங்கமணி

சென்னை

மின்வாரிய காலிப் பணியிடங்களில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். மின்வாரியம் உள்ளிட்ட எந்த பொதுத் துறை நிறுவனமும் தனியார்மயம் ஆக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.

மின்வாரியத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப மின்வாரியம் முடிவு செய்தது. இதற்காக, ஒப்பந்தப் புள்ளிகள் தேர்வு செய்வதற்கும், அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் மின்வாரியம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.


இதற்கு மின்வாரிய ஊழியர்கள் கண்டனம் தெரிவித்தனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சால், இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

மின்வாரியம் தனியார்மயம் ஆக்கப்படும் என்று கூறி, மின்வாரிய ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக அறிவிப்பு வெளியானதாக கூறப்பட்ட கடந்த 17-ம் தேதியே நான் அளித்த விளக்கத்தில், மின்வாரியம் தனியார்மயம் ஆக்கப்படாது என்று தெரிவித்தேன்.

மத்திய அரசு இதுதொடர்பாக ஒரு சட்டம் கொண்டு வந்தபோதுகூட, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாட்டிலேயே முதன்முதலாக, பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். மின்வாரியம் மட்டுமின்றி தமிழகத்தில் எந்த பொதுத்துறை நிறுவனமும் தனியார்மயம் ஆக்கப்படாது.

தற்போதுகூட அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தேன். ஆனால், வர மறுத்துவிட்டனர். இதனால், அவர்களது எண்ணம் என்ன என்பது தெரியவில்லை. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது.

50 சதவீத இடங்கள் காலியாக உள்ள இடங்களில் எல்லாம் பணிகள் தொய்வின்றி நடக்கவும், விபத்துகள் இல்லாமல், தடையில்லாமல் மின்சாரத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பகுதியில் உள்ள ஊழியர்களை வைத்து பணிகளை மேற்கொள்ளும்படி கூறி இருந்தோம். இதை அவர்கள் தவறுதலாக புரிந்துகொண்டுள்ளனர்.

மின்வாரியத்தை தனியார்மயம் ஆக்குவதற்கான ஒரு முன்னோட்டமாக இருப்பதாக ஊழியர்கள் தவறாக புரிந்துள்ளனர். ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றாலும்கூட பரவாயில்லை, கடந்த 17-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை அரசு திரும்ப பெற்றுக் கொள்கிறது.

தவறான வழிகாட்டுதல்

மின்வாரியத்தில் 10 கேங்மேன் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை, தொழிற்சங்க நிர்வாகிகள் நாளையே திரும்பப் பெற்றால், வரும் 25-ம் தேதிக்குள் அவர்களுக்கு பணி வழங்கப்படும். இதன்மூலம் 10 ஆயிரம் குடும்பங்கள் பிழைக்கும். தொழிற்சங்க தலைவர்களின் தவறான வழிகாட்டுதலால்தான், அவர்களுக்கு வேலை கிடைக்காமல் உள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள 600 உதவிப் பொறியாளர் பணியிடங்கள், 2,900 கள உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதானி நிறுவனத்துக்கு மின்வாரியம் பயிற்சி அளிப்பதாகவும், இது மின்வாரியத்தை தனியார்மயம் ஆக்குவதற்கான முன்னோடி திட்டமாக உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்படுகிறது.

சூரியஒளி மின்சார உற்பத்தி ஆலையை நிறுவ, மின்வாரியத்தில் ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்தி ஒரே ஒரு நபர் மட்டும் பயிற்சி பெற்று வருகிறார். அந்த நபரும் அதானி நிறுவனத்தை சேர்ந்தவர் அல்ல. அந்த நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்தவர். ஒரு நபருக்கு பயிற்சி அளிப்பதன்மூலம் மின்வாரியத்தை தனியார்மயம் ஆக்க முடியுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மின்வாரிய பயிற்சி மையத்தில் யார் வேண்டுமானாலும் பணம் கட்டி பயிற்சி பெறலாம்.

இவ்வாறு தங்கமணி கூறினார்.

இதற்கிடையே, காலிப் பணியிடங்களை தனியார் நிறுவனம் மூலம் நியமிக்க பிறப்பிக்கப்பட்ட ஆணையை மின்வாரியம் நேற்று ரத்து செய்தது. சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட சில இடங்களில் தனியாருக்கு வழங்கப்பட்டிருந்த துணைமின் நிலைய பராமரிப்பு அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

27 :

இன்றைய செய்தி

More From this Author

x