Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

டெல்லியில் கரோனாவால் உயிரிழந்தபுலவர் விஸ்வநாதன் அஸ்தி கரைப்பு

புதுடெல்லி: டெல்லியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புலவர் ஆர்.விஸ்வநாதனின் (89) அஸ்தி நேற்று யமுனை நதியில் கரைக்கப்பட்டது. சிறந்த நாடகக் கலைஞருமான இவரது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு மிகவும் பிரபலமானது.

சென்னையில் கடந்த 1931-ல் பிறந்த இவர், 1955-ல் மத்திய அரசின் வேலைக்காக டெல்லிக்கு வந்தார். டெல்லி தமிழ் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான விஸ்வநாதன், அதன் துணைத்தலைவராகவும் இருந்தார். தமிழ் இலக்கியத்தில் அக்காலத்திய ’புலவர்’ மற்றும் பி.லிட் பட்டமும் விஸ்வநாதன் பெற்றிருந்தார். கடந்த 1990-ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் டெல்லிவாழ் தமிழராகி, தமிழுக்காக தொடர்ந்து சேவை செய்து வந்தார்.

தமிழில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு உதவி வந்த விஸ்வநாதனுக்கு கடந்த வாரம் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். அமெரிக்காவில் வாழும் அவரது மகன், மகள் நேற்று முன்தினம் வந்த பின், டெல்லியின் லோதி பகுதியில் விஸ்வநாதனின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதையடுத்து அவரது அஸ்தி டெல்லியின் யமுனை நதியில் நேற்று கரைக்கப்பட்டது. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டார். விஸ்வநாதனின் நடிப்பில் ஷாஜஹான், டயல் எம் பார் மர்டர், ஸ்டெர்கேஸ் ஆகிய நாடகங்கள் மிகவும் பிரபலமானவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x