Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM

முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்ற கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்வதா? திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம்

முக்கியப் பிரச்சினைகள் இருக்கும்போது நாடாளுமன்ற கூட்டத் தொடரை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்திய - சீன உறவு மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக் காட்டியது, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் போன்றமுக்கிய பிரச்சினைகள் குறித்துவிவாதிக்க வேண்டிய காலகட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.

‘விவசாயிகள் போராட்டம் தேசிய பிரச்சினையாக மாறலாம்’ என்று எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம், திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்ச நீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வரும் நேரத்தில், அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ரத்துசெய்தது கண்டனத்துக்குரியது.

நாட்டின் 3-வது பெரிய கட்சியான திமுக உள்ளிட்ட முக்கியஅரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் ஆலோசனைகூட நடத்தாமல், எதேச்சதிகாரமாக முடிவு எடுத்துஅறிவித்தது ஏற்க இயலாத நடைமுறை.

விவாதங்கள் ஏதுமின்றி, மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள மனமின்றி அவசர சட்டங்களை நிறைவேற்றுவதே மார்க்கம் என்று மத்திய பாஜக அரசு இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. எனவே, எதிர்க்கட்சிகளை புறக்கணித்து பெரியண்ணன் பாணியில் செயல்படும் போக்கை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும். கருத்தொற்றுமை, ஜனநாயகம் என்ற உன்னதமான பாதைக்கு திரும்ப வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x