Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் அரசு மருத்துவமனையில் அனுமதி

வேலூர்: வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் உடல்நலக் குறைவால் வேலூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கடந்த 23 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல் நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல்நிலை குறித்து வேலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின் நேற்று மாலை 6 மணியளவில் பரிசோதனை செய்தார். அப்போது, முருகனின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறைச்சாலை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகனை நேற்று இரவு 7.15 மணியளவில் அனுமதித்தனர். மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் ஆபத்தான நிலையில் அவர் இல்லை என்றும் சிறை வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x