Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதம்

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று விவசாயிகள் ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப்மற்றும் ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக அமைந்துள்ளது. அவர்களின் போராட்டம் 19-வது நாளாக நேற்றும் நீடித்தது. அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, விவசாய சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன. டெல்லியை இணைக்கும் சாலைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தையும் அவர்கள் நடத்தினர்.

இந்நிலையில், டெல்லியிலும் போராட்டம் நடைபெறும் எல்லைப்புற சாலைகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் நேற்று காலை 8 மணிக்கு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாய சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து விவசாய சங்கத்தலைவர் பல்தேவ் சிங் கூறும்போது, “காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. நாடுமுழுவதும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டத்தை விவசாய சங்கத்தினர் நடத்தியுள்ளனர்” என்றார்.

அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்பு

இந்நிலையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக மக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லி, எல்லைப் பகுதிகள், இணைப்புச் சாலைகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிங்கு, அவுசான்டி, பியாவ் மணியாரி, சபோலி, மங்கேஷ் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

இதனிடையே விவசாயிகள் விவகாரம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் உடனிருந்தார். தீவிரமாக நடைபெற்று வரும் விவசாயிகள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர்கள் கலந் தாலோசனையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் புதிய விவசாய சட்டங்களில் உள்ளவற்றை ஷரத்துகள் வாரியாக விவாதிக்கலாம் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் இதுவரை 11 பேர் இறந்துள்ளனர் என்று விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான ராம்பால் ஜாட் தெரிவித் துள்ளார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x