Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி தலைவர்கள் டிச.18-ல் உண்ணாவிரதம் சென்னையில் நடக்கிறது; எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் வரும் 18-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அமைதியாக போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காமல் மத்திய பாஜக அரசு கொச்சைப்படுத்தி வருகிறது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவசாயிகளை அவமதிக்கும் வகையில், ‘போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் புகுந்து விட்டார்கள்’ என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. விவசாயிகளின் மகத்தான போராட்டத்தை சரியாக மதிப்பிடாமல் அவமதித்துவரும் மத்திய பாஜக அரசின் தவறான அணுகுமுறையை கண்டிக்காமல் இருக்கும் முதல்வர் பழனிசாமியின் சுயநலப் போக்கு மிகுந்த கவலைக்குரியது மட்டுமின்றி கண்டனத்துக்கும் உரியது.

டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாகவும், தனியாகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனாலும், குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், இலவச மின்சாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மின்சார திருத்தச் சட்டத்தை கைவிடவும் மத்திய பாஜக அரசு முன்வரவில்லை.

விவசாயிகளின் போராட்டத்தை எதேச்சதிகார போக்குடன் கையாளும் மத்திய பாஜக அரசையும், அதை தட்டிக் கேட்காத முதல்வர் பழனிசாமியையும் கண்டித்து வரும் 18-ம் தேதி காலை 8 முதல் மாலை 5 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிகட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்பர். விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து ஆதரிப்பதோடு, அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெறவும் திமுக கூட்டணி கட்சிகள் துணை நிற்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x