Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 03:15 AM

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கண்டனங்கள் ஜெயலலிதாவுக்கு மட்டுமே பொருந்தும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா விளக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கண்டனங்கள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு மட்டுமே பொருந்தும் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவா லயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

திமுக மீதும், கருணாநிதி மீதும், 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என் மீதும் கடந்த 3-ம் தேதி முதல்வர் பழனிசாமி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதேநாளில் செய்தியாளர்களை சந்தித்து, ‘திமுக மீது முதல்வர் தெரிவித்த வீராணம், சர்க்காரியா, 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர் ஜெயலலிதா. அவர் சிறை செல்ல காரணமான நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தேன்.

இதுகுறித்து விவாதத்துக்கு தயாரா என்று முதல்வருக்கு பகிரங்க சவால் விட்டிருந்தேன். பல நாட்களாகியும் விவாதத்துக்கு என்னை அழைக்கவில்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் ‘விஞ்ஞான ரீதியாக நடைபெற்ற ஊழல்’ என்று எந்த இடத்திலும் இல்லை என்பது அதிமுகவினருக்கு தெரியும். 2ஜி வழக்கு ஜோடிக் கப்பட்ட வழக்கு என்று நீதிபதி ஓ.பி.சைனி கூறியதும் தெரியும்.

முதல்வர் பழனிசாமி எனது சவாலை ஏற்காவிட்டாலும், மக்க ளுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும். அதற்காக ஜெயலலிதா மீதான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆழமான கருத்துகளை குறிப்பிட விரும்புகிறேன்.

‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மற்ற 3 குற்றவாளி களோடு கூட்டுச் சதியில் ஈடுபட்டு, வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை, மற்ற குற்றவாளிகளின் பெயரில் பதுக்கி வைத்துள்ளார். சசிகலா உள்ளிட்ட பிற குற்றவாளிகளை பயன்படுத்தி குற்றச் செயலில் ஈடுபட்ட ஜெயலலிதாவின் குற்றம் நிரூபணமாகியுள்ளது என்ற முடிவுக்கு நாங்கள் வருகிறோம்’ என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பொது ஊழியரான ஜெயலலிதாவின் குற்றச் செயல்கள், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பிரிக்க முடியாமல் பிரதானமாக இருந்ததால் மட்டுமே, அவரோடு சதியில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவில்லை என்றால் சசிகலா, சுதாகரன், இளவரசிஆகியோர் வருமான வரிச் சட்டத்தின்கீழ் மட்டுமே அபராதம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

சசிகலா, சுதாகரன், இளவரசிஆகியோர் அரசியல் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்ட வர்கள் அல்ல. மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் அல்ல.எனவே, உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்கள் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் பொருந்தும். இவ்வளவுக்கு பிறகும் ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று கூறுவதை பொதுவாழ்வில் குறைந்தபட்ச நேர்மையை எதிர்பார்க்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

என் மீதான 2ஜி வழக்கு காங் கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தொடரப்பட்டாலும் அதில் காங் கிரஸ் கட்சியின் பங்கு என்பது இல்லை. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், நீதிமன்றம்நியமித்த அரசு வழக்கறிஞர்கள் தான் 2ஜி வழக்கை நடத்தினர். உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வை யில்தான் என் மீதான 2ஜி வழக்கு நடந்தது. 2ஜி வழக்கு வதந்தியின் அடிப்படையில் ஜோடிக்கப் பட்டது என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், ஜெய லலிதா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

இவ்வாறு ஆ.ராசா கூறினார்.

பேட்டியின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உடனிருந்தார். முதல்வர் பழனிசாமிக்கு தான் எழுதிய பகிரங்க கடிதத்தை பேட்டியின் போது செய்தியாளர்களுக்கு ஆ.ராசா வழங்கினார்.

ராசாவின் குற்றச்சாட்டுகளுக்கு சில தினங்களுக்கு முன்பு பதில ளித்த முதல்வர் பழனிசாமி, திமுக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாகவும் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு திமுகதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்ததாகவும் கூறினார். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோது நடந்த இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சியே இதில் நடவடிக்கை எடுத்தது என்றும் இவர்கள் தற்போது அதிமுக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x