Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடந்தாலும் பிரிட்டனில் 90 வயது மூதாட்டிக்கு கரோனா தடுப்பூசி உலகிலேயே முதல் நபராக வழங்கப்பட்டது

பிரிட்டனைச் சேர்ந்த 90 மூதாட்டிக்கு, உலகிலேயே முதல் நபராக நேற்று கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

பிரிட்டனில் கரோனா தொற்று பரவி அடங்கியது. ஆனால், மீண்டும் 2-வது அலையாக கடந்த மாதம் தொற்று அதிகரித்தது. இதையடுத்து அங்கு ஊரடங்கு மறுபடியும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பைசர், ஜெர்மனியை சேர்ந்த பயோ என்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் என்று அவசர கால அடிப்படையில் பிரிட்டன் அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

அதன்படி, மார்கரெட் கீனன் என்ற 90 வயது மூதாட்டிக்கு பிரிட்டனில் நேற்று கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. மத்திய இங்கிலாந்தின் கவென்ட்ரி என்ற இடத்தில் உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு நேற்று காலை கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. கரோனா தடுப்பூசியை பல நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. அவை இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. எனினும் மேற்கத்திய நாடுகளில் முதல் முறையாக மார்கரெட் கீனன் என்ற மூதாட்டிக்கு இங்கிலாந்தில் தடுப்பூசி நேற்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மார்கரெட் கூறும்போது, ‘‘முதல் நபராக கரோனா தடுப்பூசி எனக்கு செலுத்தப்பட்டதால், நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் முன்னிலையில், மார்கரெட்டுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நர்ஸ் மே பார்சன்ஸ் தடுப்பூசி செலுத்தினார்.

இன்னும் சில நாட்களில் மார்கரெட் 91-வது வயதை எட்டுகிறார். ‘‘அதற்கு முன்னர் எனக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசு, இந்த தடுப்பூசி. இனி எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாடுவேன்’’ என்று மார்கரெட் கூறினார். இவருக்கு மகள், மகன், 4 பேரக் குழந்தைகள் உள்ளனர். நகைக் கடை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x