Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

தமிழ் வழி படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத ஒதுக்கீடு சட்ட திருத்தத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான சட்டத்திருத்தத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் நடந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின்போது, ‘தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றுஅப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்கான அரசாணை 2010-ம் ஆண்டு செப்.30-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நேரடி நியமனங்களில் 20 சதவீத ஒதுக்கீடு தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 16-ம்தேதி சட்டப்பேரவையில் பணியாளர் நலன் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தார். அதன்படி, அரசுப்பணிக்கு 10-ம் வகுப்பு வகுக்கப்பட்ட கல்வித்தகுதியாக இருந்தால், ஒருவர் அந்த வகுப்பு வரைதமிழ் வழியில் கல்வி பயின்றிருக்க வேண்டும். மேல்நிலைக்கல்வி உயர்ந்த கல்வித் தகுதியாக இருந்தால் 10-ம் வகுப்பு மற்றும் மேல் நிலைக்கல்வியையும் தமிழில் பயின்றிருக்க வேண்டும்.

அதேபோல், பட்டயப்படிப்பு உயர்ந்த கல்வித்தகுதியாக இருந்தால், 10-ம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்புவரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். ஒருவேளை, மேல்நிலைக்கல்விக்குப்பின் பட்டயப்படிப்பு படித்திருந்தால், 10-ம்வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டயப்படிப்பை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு உயர் கல்வித்தகுதியாக இருந்தால் 10-ம் வகுப்பு,மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித் திருக்க வேண்டும்.

பட்ட மேற்படிப்பு என்றால் 10-ம்வகுப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு எனஅனைத்தும் தமிழ் வழிக்கல்வி மூலம் பயின்றிருக்க வேண்டும்என்று திருத்தம் கொண்டுவரப்படுவதாக சட்டத்திருத்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது.

இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில்,ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்த சட்டத்திருத்தத்தை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தம் மூலம்இனி, தமிழ் வழியில் கல்வி பயின்றால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x