Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

நான் காந்தியின் ‘பி டீம்’ மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விளக்கம்

தன் வாழ்க்கையே தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குதான் நான் ‘பி டீம்’ என்று மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா, ரூ.280 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், ‘சுரப்பா போன்ற நேர்மையாளர்கள் பாதிக்கப்பட்டால் சும்மா இருக்க மாட்டேன்’ என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் பாஜகவின் ‘பி டீம்’ என்பது உறுதியாகி உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்து கமல் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

அறத்தின் பக்கம் நிற்பவனை பார்த்து, ‘சங்கி’, ‘பி டீம்’ என்றெல்லாம் கூறுபவர்களின் நோக்கம் ஊழலை போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தை சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வரும்போது ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை. திஹாரையும், பரப்பனஅக்ரஹாரத்தையும் நிரப்பியவர்கள் அல்லவா?

தன் வாழ்க்கையே, தன் செய்திஎன வாழ்ந்து காட்டிய காந்திக்குதான் நான் ‘பி டீம்’. ஆறு வயதில் இருந்தே நான் ‘ஏ டீம்’ என்பதை ‘ஏ ஒன்’ ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x