Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM

கொடிநாள் நிதியை தமிழக மக்கள் தாராளமாக வழங்க வேண்டும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை

கொடிநாள் நிதியை தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக வழங்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட கொடிநாள் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ‘கொடிநாள்’ தினம், போரின்போதும், அமைதியை நிலைநாட்டுவதிலும் படைவீரர்கள் புரிந்த சாதனைகள், தியாகங்களை நன்றியுடன் நினைவுகூர்வதற்கான நல்வாய்ப்பாக ஆண்டுதோறும் டிச.7-ம்தேதி படைவீரர்கள் நலத் துறை சார்பில் விழாவாக கொண்டாடப்படுகிறது. கொடிநாளுக்காக நமது பங்களிப்புகள், நம் உணர்வின் அடையாளமாகவும் துணிச்சல்மிகு வீரர்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவுக்கான சான்றாகவும் அமை கிறது. இப் பங்களிப்பு நிதி,முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் மறுவாழ்வுக்கான நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

முப்படை வீரர்களின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நன்கொடை அளிக்க முன்வரும்படி தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் பழனிசாமி: தாய்நாட்டின் இறையாண்மையைக் காத்திடும் உயரிய சேவையில் தங்களைஈடுபடுத்திக் கொண்ட முப்படை வீரர்களின் மாபெரும் தியாக உணர்வுக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிச.7-ம்தேதி படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கிறோம். இந்நாளில், படைக்களத்தில் விழுப்புண்களை ஏற்று, இன்னுயிரை ஈந்த எண்ணற்ற படைவீரர்களின் தியாகத்தையும், சேவைகளையும் நாம் மனதார போற்றும் அதேவேளை, அவர் களுக்கு எல்லா வகையிலும் உதவிகளைச் செய்யவும் நாம்கடமைப்பட்டுள்ளோம்.

பல்வேறு நலத்திட்டங்கள்

அவர்களின் நலன் காப்பதில்தமிழகம் என்றும் முன்னணியில் திகழ்கிறது. போரில் இறந்த படைவீரர்கள் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 387 முன்னாள் படை வீரர்கள் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்க கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்கியுள்ளது. முன்னாள் படை வீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவ நிவாரண நிதியுதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் வழியாக முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.

முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையிலும், தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையிலும், கொடிநாள் நிதிக்கு தாராளமாக அனைவரும் நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x