Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

காஷ்மீரில் முதல்முறையாகவாக்களித்த பாக். அகதிகள்

காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் பாகிஸ்தான் அகதிகள் முதல்முறையாக வாக்களித்துள்ளனர்.

கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சுதந்திரம் அடைந்தன. அப்போது மேற்கு பாகிஸ்தான் பகுதியில் இருந்து சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் காஷ்மீரின் ஜம்மு பகுதியில் தஞ்சமடைந்தன. அவர்கள் ஜம்மு, சம்பா, கத்வா மாவட்டங்களில் அதிகமாக வசிக்கின்றனர்.

தற்போது காஷ்மீரில் சுமார் 1.5 லட்சம் பாகிஸ்தான் அகதிகள் உள்ளனர். குடியுரிமை, வாக்குரிமை உள்ளிட்ட எவ்வித உரிமைகளும் இன்றி அவர்கள் பரிதவித்து வந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை, வாக்குரிமை கிடைத்தது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச உள்ளாட்சித் தேர்தல் கடந்த நவம்பர் 28 முதல் டிசம்பர் 19 வரை 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அகதிகள் முதல்முறையாக வாக்களித்து வருகின்றனர்.

ஜம்முவில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் 87 வயது லால் சந்தும் அவரது மனைவி திரிவிதாவும் முதல்முறையாக வாக்களித்தனர். இதன்பிறகு லால் சந்த் கூறும்போது, "கடந்த 1947-ல் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி எனது குடும்பத்துடன் ஜம்முவில் குடியேறினேன். அப்போது எனக்கு 14 வயது. இந்திய தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனது கடைசி ஆசை இப்போது நிறைவேறிவிட்டது" என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் அகதிகள் செயல் குழுவின் தலைவர் லாபா ராம் காந்தி கூறும்போது, "முதல்முறையாக இந்திய தேர்தலில் வாக்களிக்கிறோம். சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. இப்போதுதான் நாங்கள் சுதந்திரம் பெற்றுள்ளோம்" என்று தெரிவித்தார்.

லாபா ராம் காந்தி தலைமையில் பாகிஸ்தான் அகதிகள் ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x