

தருமபுரி மாவட்டம் மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோயில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி கணவாய் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வெள்ளையப்பன் கோயில் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி-அரூர்-திருப்பத்தூர்-வேலூர் வழியாக சென்னை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை தருமபுரி மாவட்ட உதவி ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது. கோயில் வளாகத்தில் நடந்த இந்தப் பணியில் பக்தர்கள் பங்கேற்றனர். உண்டியலில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இந்த தொகை வழக்கமான நடைமுறைகளின்படி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.