Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

கடைசி போட்டியில் இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும், முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்ததால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

கான்பெராவில் உள்ள மனுகாஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.

32 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து நெருக்கடியை சந்தித்த நிலையில் பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 92 ரன்களும் ஜடேஜா 50 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் விளாசியதால் வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆஷ்டன் அகர் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 303 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில்43 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழந்து 246 ரன்கள் எடுத்தது.

பும்ரா வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 3-வது பந்தில் ஆடம் ஸம்பா (4) எல்பிடபிள்யூ முறையில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3, பும்ரா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அறிமுக வீரரான தமிழகத்தின் நடராஜன் 10 ஓவர்களை வீசி 70 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

ஒரு நாள் போட்டியை தொடர்ந்து இரு அணிகளும் மூன்று டி20 ஆட்டங்கள் கொண்டதொடரில் மோதுகின்றன.

கோலி சாதனை

விராட் கோலி 23 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு நாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்தார். 242 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை கோலி எட்டியுள்ளார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் விரைவாக 12 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்பு சச்சின்டெண்டுல்கர் 300 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x