Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விமர்சித்த வழக்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் கைது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விமர்சித்து சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக முன்னாள் நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதிபதி கர்ணன். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் விமர்சித்து கர்ணன் பேசியிருந்த வீடியோ யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகின. எனவே, நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் தேவிகா என்பவர் சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில்புகார் அளித்தார். அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகார்களின்பேரில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அழைத்து வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி விட்டனர்.

இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி மற்றும்சென்னை காவல் ஆணையர் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனிடம், 2 நாட்கள் விசாரணை நடந்தது. விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இனி இதுபோன்று வீடியோ வெளியிட மாட்டேன் எனக் கூறி, எழுதிக் கொடுத்துள்ளார்” என்று கூறப்பட்டது.

காவல் துறையினரின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், அவர் அவதூறு பரப்பியதற்கான வீடியோ ஆவணங்கள் ஆதாரமாக இருக்கும் நிலையில்,அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக டிஜிபி,சென்னை காவல் ஆணையர் ஆகியோர் வரும்7-ம் தேதி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சென்னை ஆவடியில் உள்ள வீட்டில் கர்ணனை, சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நேற்று காலையில் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை டிச.16வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து புழல் சிறையில் கர்ணன் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x