Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

வாகனங்களுக்கு எப்.சி. பெறும்போது கருவிகள், பொருட்களை தனியாரிடம் வாங்க கட்டாயப்படுத்துவதா? லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வாகனங்களுக்கு எப்.சி. பெற சில தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

எப்.சி. சான்றிதழ் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும் வாகனங்கள், ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்துதான் ஒளிரும் பட்டை, வேகக் கட்டுப்பாட்டு கருவி,ஜிபிஎஸ் கருவி போன்றவற்றை வாங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஈரோடு, சென்னையில் உள்ளகுறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே ஒளிரும் பட்டைஉள்ளிட்ட கருவிகளை பொருத்திக்கொள்ள வேண்டும். அந்த தனியார் நிறுவனம் அளிக்கும் தகுதிச் சான்றிதழின் அடிப்படையில் மோட்டார் வாகன அதிகாரி சான்றளிக்க வேண்டும் என்று அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது அரசு நிர்வாகமா அல்லது போக்குவரத்துத் துறை அமைச்சர் நடத்தும் துக்ளக் தர்பாரா என்பது தெரியவில்லை.

எப்.சி. சான்றளிக்கும் முன்பு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் இணையதளத்துக்கு சென்று அந்தச் சான்றிதழ் உண்மையானது தானா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அரசுத் துறையை, தனியார் நிறுவனங்களின் எடுபிடியாக ஆக்கியதை ஏற்க முடியாது.

நீதிமன்ற உத்தரவுப்படி இந்தச்சுற்றறிக்கைகளை திரும்பப் பெற்றாலும், கருவிகள் வாங்குவதும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து அங்கீகாரக் கடிதம் பெற்று எப்.சி. புதுப்பிக்க வேண்டும் என்பதும் தொடருகிறது. தனியார் நிறுவனத்தில்தான் கருவிகள் வாங்க வேண்டும், அங்கீகாரக் கடிதம் பெற வேண்டும் என்றுகட்டாயப்படுத்துவதை போக்குவரத்துத் துறை அமைச்சர் உடனடியாக கைவிட வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு ஏன் இந்த அனுமதி அளிக்கப்பட்டது, மக்களின் பாதுகாப்புக்கு எதிரானவிதிமுறைகளை வகுத்தது யார் என்று லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் திமுக ஆட்சி அமைந்தவுடன் போக்குவரத்துத் துறையில் நடந்துள்ள இந்த முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x