Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி 20-ல் 46 பந்துகளில் சதம் விளாசி நியூஸி. பிலிப்ஸ் சாதனை

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

மவுண்ட் மவுங்கனுயில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 3 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. கிளென் பிலிப்ஸ் 51 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் விளாசினார். அவர், 46 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். இதன் மூலம் டி20 ஆட்டங்களில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்னர் கடந்த 2018-ம்ஆண்டு இதே மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக காலின் மன்றோ 47 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். இந்த சாதனையை தற்போது பிலிப்ஸ் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

239 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் கெய்ரன் பொலார்டு 28, சிம்ரன் ஹெட்மையர் 25, கீமோ பால் 26, கைல் மேயர்ஸ் 20 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் கைல் ஜேமிசன், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 2-0 என கைப்பற்றியது. கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x