Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

2-வது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரை இழந்தது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட் டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஒரு முறை 62 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். முதல் ஒரு நாள் போட்டியிலும் ஸ்மித் 62 பந்துகளிலேயே சதம் விளாசியிருந்தார். 64 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

முன்னதாக டேவிட் வார்னர் 83, கேப்டன் ஆரோன் பின்ச் 60, இறுதிக் கட்டத்தில் மட்டையை சுழற்றிய கிளென் மேக்ஸ்வெல் 63, மார்னஸ் லபுஷான்70 ரன்கள் எடுத்து இந்திய கிரிக்கெட் அணி யினரை மிரளச் செய்தனர்.

பந்து வீச்சில் பும்ரா 10 ஓவர்களில் 79 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஷைனி 7 ஓவர்களை வீசி 70 ரன்களை தாரை வார்த்தார். யுவேந்திர சாஹல் 71, மொகமது ஷமி 73, ஜடேஜா 60 ரன்களை வழங்கினர். 390 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 45 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால் 28, ஷிகர் தவண் 30, ஸ்ரேயஸ் ஐயர் 38 ரன்களில் வெளியேறினர்.

கேப்டன் விராட் கோலி 87 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் ஹேசல்வுட் பந்திலும் கே.எல்.ராகுல் 66 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களும் எடுத்த நிலையில் ஆடம் ஸம்பா பந்திலும் பெவிலியன் திரும்பினர். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 87 ரன்கள் தேவைப்பட்டது. மிட்செல் ஸ்டார்க் வீசிய 46-வது ஓவரில் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் ரவீந்திர ஜடேஜா (24), ஹர்திக் பாண்டியா (28) ஆகியோர் நடையை கட்டினர்.

தொடர்ந்து மொகமது ஷமி 1, பும்ரா 0 ரன்களில் வெளியேற 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 3, ஜோஸ் ஹேசல்வுட், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் அந்த அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி ஆட்டம் வரும் 2-ம் தேதி கான்பெராவில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x