Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க குத்தகைக்கு கோயில் நிலம் நில விற்பனையை ரத்து செய்தது இந்து சமய அறநிலையத்துறை

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க வீர சோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 39.82 ஏக்கர் நிலத்தை ரூ.1 கோடியே 98 லட்சத்து 87 ஆயிரத்து 38-க்கு வருவாய்த் துறைக்கு விற்பனை செய்ய இந்து சமய அறநிலையத் துறை ஆணை பிறப்பித்தது.

மாத வாடகை ரூ.1.30 லட்சம்

இதற்கு பல்வேறு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர். தற்போது நில விற்பனை ஆணையை இந்து சமய அறநிலையத்துறை ரத்து செய்துள்ளது. அவ்விடத்தை குத்தகைக்கு விட முடிவு செய்து,அதற்கான அரசாணையை நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதன்படி, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 16.11 ஹெக்டேர் புன்செய் நிலத்தில், 14.09 ஹெக்டேர் (39.82 ஏக்கர்) நிலத்தை, மாத வாடகை ரூ.1.30 லட்சம் என்ற அடிப்படையில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைக்க, வருவாய்த் துறைக்கு நீண்ட கால குத்தகைக்கு விடப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

நிபந்தனைகள்

வருவாய்த்துறை மற்றும் பிற துறை ஆவணங்களில், 'அர்த்தநாரீஸ்வரர் கோயில் பெயர்' உரிமையாளர் என்ற நிலையில் நிரந்தரமாக இடம் பெற வேண்டும். 3 ஆண்டுகளுக்கான வாடகை தொகை ரு.46 லட்சத்து 80 ஆயிரத்தை முன்பணமாக ஒப்பந்த பத்திரம் இறுதியாக்கப்படும் முன் செலுத்தப்பட வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை மறு நிர்ணயம் செய்யப்படும். புதிதாக கட்டிடம் கட்டும்போது, செயல் அலுவலரின் அனுமதி பெற வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் தவிர இதர வணிக நோக்கம் எதற்கும் கோயில் நிலத்தை பயன்படுத்தக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x