Last Updated : 30 Nov, 2020 03:12 AM

 

Published : 30 Nov 2020 03:12 AM
Last Updated : 30 Nov 2020 03:12 AM

‘நிவர்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் ஆண்டியப்பனூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: அணை நிரம்பினால் 20 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்

‘நிவர்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் ஆண்டியப்பனூர் அணையின் நீர்மட்டம் 7.69 மீட்டராக உயர்ந்துள்ளது. அணை முழுமையாக நிரம்பி தண்ணீர் வெளியேறினால், சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையையொட்டியுள்ள கொட்டாறு மற்றும் பெரியாறு ஆகிய ஆறுகளுக்கு குறுக்கேரூ.27.38 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஆண்டியப்பனூர் அணை நீர்த்தேக்கம் கடந்த 2007-ம் ஆண்டு திறக்கப்பட்டது. கொட்டாறு, பெரியாறு என்ற 2 ஆறுகளில் இருந்து வரும் மழைநீர் ஆண்டியப் பனூர் அணையை வந்தடைகிறது.

அணையின் மொத்த கொள்ளளவு 112.20 மில்லியன் கனஅடியாகும். அணையின் உயரம் 8 மீட்டர். அணையின் நீளம் 1,185 மீட்டராகும். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த கனமழையால் ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பியது.

இந்நிலையில், ‘நிவர்’ புயல் காரணமாக ஜவ்வாதுமலைத் தொடரில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 7.69 மீட்டராக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 19.93 கன அடியாக உள்ளது. தற்போது, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜவ்வாதுமலைத்தொடரில் கனமழை பெய்தால் ஆண்டிப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டும். அணை நிரம்பி தண்ணீர் வெளியேறினால் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். மேலும் 20-க்கும் மேற்பட்ட ஏரிகளும் முழுமையாக நிரம்பி விவசாயப்பணிகள் செழிப்பாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘‘ஆண்டியப்பனூர் அணை நிரம்பி அதிலிருந்து வெளியேறும் மழைநீர் முதலில் சின்னசமுத்திரம் ஏரி, வெள்ளேரி, மாடப்பள்ளி ஏரி வழியாக சென்று அங்கிருந்து இரு கிளைகளாக பிரிகிறது.

அதில், ஒரு கிளை வழியாக செலந்தம்பள்ளி, கோனேரிக் குப்பம், முத்தகம்பட்டி, பசிலிக் குட்டை, ராட்சமங்கலம், கம்பளி குப்பம் உள்ளிட்ட ஏரிகள் வழியாக சென்று பாம்பாற்றை அடைகிறது. மற்றொறு கிளை வழியாக கணமந்தூர், புதுக்கோட்டை ஏரிகள் வழியாக சென்று திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி அங்கிருந்து பாம்பாற்றில் கலக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் ஆண்டியப்பனூர் அணை நிரம்பி அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின.

இதையடுத்து, 2017-ம் ஆண்டு பெய்த கனமழையால் ஆண்டி யப்பனூர் அணை நிரம்பியது. அதிலிருந்து வெளியேறிய தண்ணீரில் ஒரு சில ஏரிகள் மட்டுமே நிரம்பின. குறிப்பாக, ராட்சமங்கலம் ஏரி, திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பவில்லை. இந்நிலையில், தற்போது ‘நிவர்’ புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரளவுக்கு மழை பெய்தது. தற்போது, வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு ஆண்டியப்பனூர் அணை நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்.

அவ்வாறு அணை நிரம்பினால் 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி, அதன் மூலம் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என எதிர் பார்க்கிறோம்’’ என்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் குமார் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, "தற் போதைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 20 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 104.4 மில்லியன் கன அடியாக உள்ளது. தொடர்ந்து, 2 நாட்களுக்கு மழை பெய்தால் அணை முழு கொள்ளளவை எட்டும். அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் முதலில் சின்ன சமுத்திரம், மாடப்பள்ளி ஏரிக்கு செல்லும்.

அந்த ஏரிகள் நிரம்பினால் அதன் மூலம் சுற்றியுள்ள 20-க்கும்மேற்பட்ட ஏரிகள் நிரம்ப வாய்ப் புள்ளது. இதற்கிடையே அணை யின் தெற்கு திசையில் உள்ள லாலாப்பேட்டை, குண்டடியூர், மிட்டூர், இருணாப்பட்டு, பாப்பனூர் மேடு, குரிசிலாப்பட்டு ஆகிய கிராமங்களையொட்டியுள்ள எகில்லேரி, புதுஏரி, வாத்தியார் குட்டை, கவனமுட்ட ஏரி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் திருப்பிவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு, நீர்வரத்துக் கால்வாய்கள் அமைக்கப்பட்ட பிறகு அதற்கான அறிவிப்பு பிறகு வெளியிடப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x