Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

கரோனா பரவலை தடுக்க மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிகளை அமல்படுத்தாதது ஏன்? மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

மத்திய அரசின் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா, சுபாஷ் ரெட்டி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் நாள்தோறும் 15,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ சிகிச்சை வசதிகளை ஏற்படுத்துமாறு டெல்லி அரசுக்கு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் டெல்லி அரசு குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.

டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக டெல்லி அரசு தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக விளம்பரம் வெளியிடவில்லை. கரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்படவில்லை.

வீடு, வீடாக சோதனை நடத்த மத்திய சுகாதாரத் துறை டெல்லி அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இவ்வாறு சோதனை நடத்தப்படவில்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை முறையாக கண்காணிக்கவில்லை.இவ்வாறு மத்திய அரசு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கண்டனம்

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பு குஜராத்தின் அகமதாபாத், ஆந்திராவில் உள்ள கரோனா மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. எங்களுக்கு அறிக்கைகளில் ஆர்வம் இல்லை. கரோனா மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கான மூல காரணத்தை மத்திய அரசு கண்டறிய வேண்டும்.

நடப்பு நவம்பர் மாதம் முதல் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது. ஆனால் கேளிக்கை, கொண்டாட்டங்கள் எவ்வித தடையும் இன்றி நடைபெறுகின்றன. 60 சதவீத மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிகின்றனர். 30 சதவீத மக்களின் முகக்கவசம் தாடையில் தொங்குகிறது. இப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில அரசுகள் செயல்பட வேண்டும். கரோனா தடுப்பு தொடர்பாக மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிகளை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்தாதது ஏன்? இப்போதைய நிலையில் கரோனா வைரஸுக்கு மருந்து இல்லை. இந்த சூழ்நிலையில் தடுப்பு நடைமுறைகளை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் அதிக கூட்டம் கூடுவதை அரசு அதிகாரிகள் தடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x