Published : 27 Nov 2020 07:20 AM
Last Updated : 27 Nov 2020 07:20 AM

கால்பந்து ஜாம்பவான் டிகோ மரடோனா மரணம் கேரளாவில் 2 நாள் துக்கம் அனுசரிப்பு

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டிகோ மரடோனா (60)புதன்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மரடோனா, மருத்துவமனையில் இருந்து திரும்பி 2 வாரங்களே ஆன நிலையில் நேற்று முன்தினம் தனது இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1986-ல் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்து பெருமை சேர்த்தவர் மரடோனா.

மரடோனா தேசிய அணிக்காக 1977 முதல் 1994 வரையில் 91 ஆட்டங்களில் 34 கோல்கள் அடித்துள்ளார். அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். அர்ஜென்டினாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் மரடோனாவுக்கு ரசிகர்கள் உண்டு. பிரேசிலுக்கு பீலே, அர்ஜென்டினாவுக்கு மரடோனா என கால்பந்து களத்தில் கொடிகட்டிப் பறந்தவர். 2000-ம் ஆண்டில், மரடோனாவை நூற்றாண்டின் கால்பந்து வீரராக ஃபிஃபா (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அங்கீகரித்தது.

மரடோனா மறைவைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டுப் அதிபர் அல்பெர்டோ ஃபெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கால்பந்துக்கும் மரடோனாவுக்கும் அதிக ரசிகர்களைக் கொண்ட கேரள மாநிலமும் மரடோனாவின் மறைவுக்காக இரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

கடந்த 2012-ல் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவுக்காக கேரளாவுக்கு வந்து, இரு நாள் தங்கி ரசிகர்களை மகிழ்வித்திருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு அறக்கட்டளை ஒன்று நடத்திய கால்பந்து ஆட்டத்துக்காக மரடோனா கொல்கத்தா வந்திருந்தார். அப்போது அவர் கங்குலி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். மரடோனாவின் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, பிரபல கால்பந்தாட்ட வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x