Published : 27 Nov 2020 07:20 AM
Last Updated : 27 Nov 2020 07:20 AM

10 தொழிற்சங்கங்கள் சார்பில் ‘பாரத பந்த்’ரயில் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

புதுடெல்லி: ‘பாரத பந்த்' போராட்டத்தை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கேரளாவில் பஸ் போக்குவரத்து முடங்கியது.

மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை கண்டித்து ஐஎன்டியூசி, ஏஐடியூசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதையொட்டி மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்கள் சார்பில் பெல்காரியா மற்றும் ஜாதவ்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரத பந்த் போராட்டத்துக்கு கேரளாவில் இடதுசாரி அரசு ஆதரவு அளித்தது. இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் கடைத் தெருக்கள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோல் நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

விவசாய விரோத, தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், வருமான வரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும், ஏழைக் குடும்பங்களுக்கு நபருக்கு 10 கிலோ வீதம் இலவச உணவு தானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பிஎம்எஸ் (பாரதிய மஸ்தூர் சங்) பங்கேற்க வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x