Published : 27 Nov 2020 07:20 AM
Last Updated : 27 Nov 2020 07:20 AM

நிவர் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

‘நிவர்’ புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘நிவர்’ புயல், மழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர், வில்லிவாக்கம், திருவிக.நகர், துறைமுகம், எழும்பூர் ஆகிய தொகுதிகளில் நேற்றும், ராயபுரம், ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் இன்றும் மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். கடந்தகால புயல், 2015 பெருவெள்ளத்தில் இருந்து எந்த பாடத்தையும் அதிமுக அரசு கற்றுக் கொள்ளவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

குடிசைமாற்று வாரிய வீடுகள் உள்ள பகுதிகள், தாழ்வான பகுதிகள், முக்கியச் சாலைகள் தண்ணீரில் மூழ்கி, கடல் போல் காட்சியளிக்கின்றன. ஆனால், முதல்வரும் அமைச்சர்களும் ‘உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நீர் தேங்கவில்லை’ என்று கூறி வருவது வேதனையளிக்கிறது.

2015 பெருவெள்ளத்தின்போது அதிமுக அரசின் தோல்விகள் பற்றி தனியாக சிஏஜி ஓர் அறிக்கையே கொடுத்தது. அதில், சொல்லப்பட்ட குறைகளை, எதிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டியஆக்கபூர்வமான ஆலோசனைகளை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்தவில்லை.

சென்னை மாநகரத்தைப் பற்றி உள்ளாட்சித் துறை அமைச்சர் துளிகூட கவலைப்படவில்லை. அதை முதல்வர் பழனிசாமியும் எப்போதும்போல் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் ரொக்கமாக வழங்க வேண்டும். வீடு இழந்தவர்களுக்கு புது வீடு கட்டித் தருவதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

இதுதவிர, காவிரி டெல்டாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் செய்யப்பட்டுள்ள விவசாயம் இன்னும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வருகிறது. எனவே, பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நவ.30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x