Published : 26 Nov 2020 03:16 AM
Last Updated : 26 Nov 2020 03:16 AM

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள 14,139 ஏரிகளில் 1,697 ஏரிகள் முழுமையாக நிரம்பின: பொதுப் பணித் துறை தகவல்

தமிழகத்தில் உள்ள 14,139 பாசன ஏரிகளில் 1,697 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அத்துடன் வங்கக் கடலில் உருவான ‘நிவர்’ புயலால் கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாசன ஏரிகள் நிரம்பி வருகின்றன.

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 14,139 ஏரிகளில் இதுவரை 1,697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 487 ஏரிகள் 91 முதல் 99 சதவீதமும், 876 ஏரிகள் 81 முதல் 90 சதவீதமும், 834 ஏரிகள் 71 முதல் 80 சதவீதமும், 1,481 ஏரிகள் 51 முதல் 70 சதவீதமும் நிரம்பியுள்ளன. 2,073 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 4,919 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளது. 1,772 ஏரிகளில் நீர் இருப்பு இல்லை.

அதிகபட்சமாக 2,040 ஏரிகள் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் 392 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள417 ஏரிகளில் 70, சென்னை மாவட்டத்தில் 28 ஏரிகளில் 2, செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில் 78, மதுரை மாவட்டத்தில் 1,340 ஏரிகளில் 242, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,131 ஏரிகளில் 36, தென்காசி மாவட்டத்தில் 543 ஏரிகளில் 226 ஏரிகள் நிரம்பியுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1,460 ஏரிகளில் ஒரு ஏரிகூட நிரம்பவில்லை. அரியலூர், தருமபுரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் ஒரு ஏரிகூட 100 சதவீதம் நிரம்பவில்லை. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒரு ஏரி மட்டும் 100 சதவீதம் நிரம்பியுள்ளது என்று பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x