Published : 26 Nov 2020 03:16 AM
Last Updated : 26 Nov 2020 03:16 AM

‘தீ’ செயலி மூலம் ஒரே நாளில் 100 இடங்களில் மீட்பு பணிகள்

‘தீ’ செயலி மூலம் நேற்று ஒரே நாளில் 100 இடங்களில் மீட்புப் பணிகள் செய்யப்பட்டன என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து, வெள்ளம், ஆழ்துளை கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயு கசிவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு தீயணைப்புத் துறையை எளிதில் அணுக, நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டிலேயே முதல்முறையாக தீயணைப்புத் துறையால் ‘தீ’ என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆம்டெக்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த செயலியின் மூலம், அவசர காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்புத் துறையை எளிதில் அணுக முடியும். அழைப்பு வந்த 10 விநாடிக்குள் தீயணைப்பு நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, விபத்து மற்றும் உதவிகோரும் இடத்துக்கு மிக குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தகுந்த உபகரணங்களுடன் சென்று உதவும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘தீ’செயலியுடன் கூடிய 371 டேப்லெட்கள், அனைத்து தீயணைப்பு நிலையங்கள் மற்றும் சென்னையில் உள்ள தீக்கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளன.

நேற்று காலையில் இருந்தே மழையுடன் காற்றும் வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சிலர் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு வெள்ள நீருக்கு நடுவே சிக்கிக் கொண்டனர். இவர்கள் ‘தீ’ செயலி மூலம் தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொள்ள, உடனே சம்பவ இடத்துக்கு அவர்கள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 100 மீட்புப் பணிகள் தீ செயலி மூலம் செய்யப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x