Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

மீட்பு, நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரம் 13 லட்சம் பேர் தங்குவதற்கு முகாம்கள் தயார் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முகாமிட்டுள்ள அமைச்சர் உதயகுமார் தகவல்

புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு மத்திய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினருடன் ராணுவம், கடற்படையின் பல்வேறு பிரிவினரும் தயார் நிலையில் உள்ளதாக, மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் தொடர்ந்து முகாமிட்டுள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

புயல் உள்ளிட்ட பேரிடர்களின் நிகழ்வுகள் தொடர்பாக வானிலைஆய்வு மையத்தின் தகவல்களைஒருங்கிணைத்து, அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கும் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல், தொடர் பணிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் வருவாய் நிர்வாக ஆணையரகம் மேற் கொண்டு வருகிறது. இதற்காக,மாநில பேரிடர் அவசரகால கட்டுப்பாட்டு மையம் சென்னை எழிலகவளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வார்தா, ஒக்கி, கஜா புயல்கள் தொடர்பான தகவல்களை ஒருங்கிணைத்த இந்த மையம்தற்போது, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து வருகிறது.

இந்த மையத்தில் இருந்தபடியே கடந்த 3 நாட்களுக்கும் மேலாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், துறை செயலர் அதுல்யமிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகந்நாதன், சிறப்பு அதிகாரி ஜெ.குமரகுருபரன் ஆகியோர் புயல் தொடர்பான தகவல்களை தொகுத்து அரசுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கி வருகின்றனர்.

இந்த மையத்தில் 24 மணிநேரமும் அலுவலர்கள் தொடர்ந்து தகவல்களை தொகுப்பது மற்றும் பொதுமக்கள் ‘1070’ என்ற தொடர்பு எண்ணில் அளிக்கும் தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவித்தும் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்த மையத்தை முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் பார்வையிட்டு, பணிகளை ஆய்வு செய்தார்.

இந்நிலையில், நிவர் புயல்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

அதிதீவிர புயல் பயணிக்கும் பாதையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் குடிசைகள், பாதுகாப்பற்ற பழமையான கட்டிடங்களில்இருப்பவர்களை நிவாரண முகாம்களுக்கு வர அறிவுறுத்தியுள்ளோம். கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். அமைச்சர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனர்.

பேரிடர் மீட்பு படையினர்

கடலூரில் 6 குழுக்கள், நாகை, செங்கல்பட்டில் 3 குழுக்கள், விழுப்புரத்தில் 2 குழுக்கள் என பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் 8 குழுக்கள் தயாராக உள்ளன. கடற்படையின் ஐஎன்ஸ் ஜோதி கப்பல் மற்றும் 5 வெள்ள மீட்பு குழுவினர் உட்பட பல்வேறு குழுக்களும் தயாராக உள்ளன.

பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு வரவேண்டும். 13 லட்சம் பேரை தங்கவைக்கும் அளவுக்கு முகாம்கள் தயாராக உள்ளன. அங்கு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புயலின் வேகத்தை உன்னிப்பாக கவனித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆம்புலன்ஸ்களில் மரம் அறுக்கும் இயந்திரம்

நோயாளிகளை காப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மரம் அறுக்கும் இயந்திரம் எடுத்து செல்லப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது: நிவர் புயலை எதிர்கொள்வதற்கான விரிவான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிவர் புயலால் ஏற்படும் அவசரகால தேவைக்காக 465 ஆம்புலன்ஸ்கள் பிரத்யேகமாக தயார் நிலையில் உள்ளன. கடலோர பகுதிகளில், 30 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. நோயாளிகளை காப்பதற்கு மட்டுமின்றி போகும் வழியில் மரங்கள் விழுந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு தேவையான மரம் அறுக்கும் இயந்திரம் 108 ஆம்புலன்ஸில் எடுத்து செல்லப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x