Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

மண்டல பொறியாளர்களுடன் அவசர ஆலோசனை ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயார் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தகவல்

‘நிவர்’ புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதுஎன அமைச்சர் தங்கமணி கூறினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி காணொலி காட்சி மூலம் நேற்று கலந்தாய்வு நடத்தினார். ‘நிவர்’ புயலின்போது மின்வாரியம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசித்தார். மேலும், புயலின்போது மின்தடை ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அமைச்சர் மேலும் பேசியதாவது:

புயலால் ஏற்படும் சேதத்தை சீரமைக்க தேவையான தளவாட பொருட்களான மின்கம்பிகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவற்றை போதிய அளவு இருப்புவைக்க வேண்டும். சேதத்தை சரிசெய்ய தேவைப்படும் பணியாளர்களை கோட்டவாரியாக சிறப்புகுழுக்களாக அமைத்து பாதுகாப்புஉபகரணங்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

துணை மின்நிலையங்களில் வெள்ளநீர் புகாவண்ணம் தேவையான மணல் மூட்டைகள் மற்றும்நீர் இரைப்பான்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத் திருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அறிவுறுத் தினார்.

இந்த கலந்தாய்வில் மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:

‘நிவர்’ புயலை எதிர்கொள்ள மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்தால் அவற்றை சீரமைக்க தேவையான மின்கம்பங்கள் தயாராக உள்ளன. பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் பாதுகாப்பு கருதி புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும். புயல்கரையை கடந்த பிறகு சேதங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக சீரமைத்து மின்சாரம் விநியோகிக்கப்படும். எனவே, அதை மின்வெட்டு என பொதுமக்கள் கருதக் கூடாது.

ஏற்கெனவே, ‘கஜா’ புயலின்போது 3.30 லட்சம் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. அவை உடனடியாக சீரமைக்கப்பட்டன. தாழ்வானபகுதிகளில் உள்ள மின்கம்பிகளைநாளைக்குள் (இன்று) சீரமைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மிக அதிகமழை பெய்வதால், உலக வங்கிஉதவியுடன் பூமிக்கடியில் புதைவடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 75 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சிய பணிகளும் விரைவில் முடிக்கப்படும். சென்னையில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியைதவிர பிற இடங்களில் பூமிக்கடியில் மின்சார கேபிள்கள் செல்வதால் புயலால் பாதிப்பு ஏற்படாது.மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திய ‘கஜா’ புயலையே மின்வாரியம் வெற்றிகரமாக எதிர்கொண்டது. அதனால், இந்த புயலையும் எளிதாக மின்வாரியம் எதிர்கொள்ளும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.

சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்

இதற்கிடையே, புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சுகாதாரத் துறை இணை, துணை இயக்குநர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினர். இதுபற்றிசுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் 24மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். ஜெனரேட்டர் உள்ளிட்ட மின்சாதனங்களை தயாராக வைத் திருக்க வேண்டும்.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதுடன், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x