Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 15 இடம் பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது

மருத்துவப் படிப்புகளில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்குமாறு தரவரிசைப் பட்டியலில் முதல் 361 இடங்களை பெற்றவர்களுக்கு (நீட் மதிப்பெண் 710 முதல் 631 வரை) அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 8-வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்த திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த ஆர்.ஜன், 705 மதிப்பெண்களுடன் 2-வது இடம் பிடித்தநாமக்கலைச் சேர்ந்த மோகனபிரியா ரவிச்சந்திரன், 701 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தைப்பிடித்த சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.ஸ்வேதா உட்பட முதல் 15 இடங்களை பிடித்தவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதனால், நீட் தேர்வில் 681 மதிப்பெண் எடுத்து16-வது இடத்தில் இருந்த வருண் கே.சாமி தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) நாராயணபாபு கூறியதாவது:

நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படுகிறது. இவைதவிர மத்திய பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய அளவில் கலந்தாய்வு நடைபெறுகிறது. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் மாநில கலந்தாய்வு, அகில இந்திய கலந்தாய்வு என இரண்டுக்கும் விண்ணப்பிப்பார்கள். மாநில கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே அகில இந்திய கலந்தாய்வு தொடங்கிவிட்டது. அதனால், தரவரிசைப் பட்டியலில் முதல் 15 இடங்களை பெற்றவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் இடங்களை பெற்று இருப்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தரவரிசைப் பட்டியலில் 6-வதுஇடம் பிடித்த என்.என்.நமீசரண், 8-வது இடம் பிடித்த எம்.விக்னேஷ், 9-வது இடம் பிடித்த டி.ஆதித்தன், 3-வது இடம் பிடித்த ஜி.ஸ்வேதா அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துவிட்டதால் மாநில ஒதுக்கீடுக்கான கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x