Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

7 மாதங்களுக்குப் பிறகு சிறு பழ விற்பனை கடைகள் கோயம்பேடு சந்தையில் திறப்பு பழங்களின் விலை குறைய வாய்ப்பு

கோயம்பேடு சந்தையில் 7 மாதங்களுக்குப் பிறகு சிறு பழ விற்பனை கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மே 5-ம் தேதி அந்த சந்தை மூடப்பட்டது. பழங்கள் மொத்த விற்பனை கடைகள் மற்றும் சிறு கடைகள் என 250 கடைகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் செயல்பட தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே கோயம்பேடு சந்தையில் படிப்படியாக கடைகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த நவ. 1-ம் தேதி பழங்கள் மொத்த விற்பனையில் ஈடுபடும் 120 கடைகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று 700 சிறு விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்தக் கடைகளில் இரவு 7 மணி முதல் 12 மணி வரை பழங்களை இறக்கவும், இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரிகள் பழங்களை வாங்கவும் அனுமதிக்கப்படுவர் என சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சந்தை வளாகம் மற்றும் கடைகளில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். வியாபாரிகள், தொழிலாளர்கள், சில்லறை வியாபாரிகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசின் கரோனா தொற்று தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படுவதுடன், கடையை மூடி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்பேடு சந்தை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோயம்பேடு பழச் சந்தையில்தற்போது மொத்த விற்பனைக்கடைகள், சிறு விற்பனைக் கடைகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ள நிலையில், பழங்களின் விலை சென்னையில் குறைய வாய்ப்புள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x