Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

கட்டணம் செலுத்த முடியாததால் எம்பிபிஎஸ் இடத்தை மறுத்த மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கட்டணம் செலுத்த முடியாததால் எம்பிபிஎஸ் இடத்தை ஏற்க மறுத்த மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் பலர், கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. சேலம் மாவட்டம் நெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி எஸ்.சுபத்ரா, திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த மாணவர் அருண்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.தங்கபாண்டி, மற்றொரு மாணவி தங்கப்பேச்சி உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகள், கல்விக் கட்டணம் செலுத்தமுடியாததால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்து, அரசு மருத்துவக் கல்லூரியின் இட ஒதுக்கீட்டுக்காக காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இதேபோல், கடலூர் மாவட்டத்தில் சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி இலக்கியா, கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஆகியோரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம்செலுத்த சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் காலதாமதமாக அறிவித்ததும், இந்தமாணவ மாணவிகளுக்கு கலந்தாய்வின் போதே முக்கியமான இந்த தகவலைத் தெரிவிக்காததும், நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், பல மாணவர்களின் மருத்துவக் கனவு, கைக்குஎட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்றாகி விட்டது. இதற்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்புஅரசுக்கு இருக்கிறது.

எனவே, கல்விக் கட்டணம் செலுத்தும் பிரச்சினையால் தங்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையை தாமதமின்றி எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலினின் இந்த கடிதத்தை திமுக எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன்,பி.கே.சேகர்பாபு ஆகியோர் முதல்வர் அலுவலகத்தில் நேற்று ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x